நாக்பூரில் கனமழை: வெள்ள சேதங்களை தேவேந்திர பட்னாவிஸ் பார்வையிட்டார்

நாக்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆய்வு செய்தார்.

Update: 2023-09-24 20:00 GMT

மும்பை, 

நாக்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆய்வு செய்தார்.

நாக்பூரில் வெள்ளம்

நாக்பூரில் நேற்று முன்தினம் அதிகாலை பலத்த மழை பெய்தது. குறிப்பாக அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. 3 மணி நேரத்தில் நாக்பூரில் 9 செ.மீ. மழை பதிவானது. ஒட்டுமொத்தமாக நள்ளிரவில் மட்டும் 10.9 செ.மீ. மழை பெய்தது. இதன் காரணாக நகரே வெள்ளத்தில் மூழ்கியது. சாலைகளில் தண்ணீர் ஆறுபோல ஓடியது. பல இடங்களில் கார், பஸ் போன்ற வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மழை காரணமாக அம்பாசாரி ஏரி நிரம்பி அதில் இருந்து உபரிநீர் வெளியேறியது. இதன் காரணமாக ஏரியை சுற்றியிருந்த பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியது.

4 பேர் பலி

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். மாற்று திறனாளி மாணவர்கள் 70 பேர் உள்பட வெள்ளத்தில் சிக்கிய 400 பேரை மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். பலத்த மழை, வெள்ளத்துக்கு நாக்பூரில் 2 மூதாட்டிகள் உள்பட 4 பேர் பலியானார்கள். 14 கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

பட்னாவிஸ் ஆய்வு

இந்தநிலையில் தனது சொந்த ஊரான நாக்பூரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வு பணியின் போது அவர் கூறியதாவது:- வெள்ளம் காரணமாக சுமார் 10 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல வீடுகளுக்குள் சகதி புகுந்து இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் மருத்துவ உதவி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளது. வெள்ளச்தேசம் அதிகமாக உள்ளது. வழக்கத்தைவிட அதிக மழை பெய்து உள்ளது. முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து இருந்தால் பாதிப்பை குறைத்து இருக்கலாம். வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை தான் விடுத்து இருந்தது. ஆனால் இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த அளவு மழை பெய்யும் என கணிக்கவில்லை. அம்பாசாரி ஏரி நிரம்பினால் பாதிப்பை குறைக்கும் வகையில் உள்கட்டமைப்பு திட்டங்களை மாநில அரசு திட்டமிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்