வசாயில் தலையில்லாத பெண் உடல் மீட்கப்பட்ட விவகாரம்: மனைவியை கொலை செய்தவர் ஒரு ஆண்டுக்கு பிறகு கைது
வசாயில் தலையில்லாத பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவத்தில் ஒரு ஆண்டுக்கு பிறகு மனைவியை கொலை செய்ததாக கணவரை போலீசார் கைது செய்தனர்.;
வசாய்,
வசாயில் தலையில்லாத பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவத்தில் ஒரு ஆண்டுக்கு பிறகு மனைவியை கொலை செய்ததாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
தலையில்லாத உடல் மீட்பு
வசாய், புய்காவ் கடற்கரையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் போலீசார் தலையில்லாத பெண் உடலை கைப்பற்றினர். பெண் உடலில் இருந்த மருதாணியை வைத்து அவர் ஒரு இஸ்லாமிய பெண் என்பது மட்டும் தெரியவந்தது. ஆனால் அவர் யார் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நாலச்சோப்ராவில் உள்ள அசோலே போலீசில் சானியா சேக்(வயது25) என்ற பெண் மாயமானது தொடர்பான புகார் ஒன்று வந்து இருந்தது. அந்த புகாரை கர்நாடகாவை சேர்ந்த சானியா சேக்கின் உறவினர்கள் கொடுத்து இருந்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் வசாய் கடற்கரையில் தலையில்லாமல் மீட்கப்பட்ட பெண் சானியா சேக் தான் என்பது தெரியவந்தது.
மனைவி கொலை
மேலும் போலீசார் இதுதொடர்பாக சானியா சேக்கின் கணவர் ஆசிப் சேக்கை (வயது31) பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் சானியா சேக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவரது காதலனுடன் ஓடிப்போய்விட்டதாக கூறினார். மேலும் சானியா சேக் எழுதி வைத்ததாக கடிதம் ஒன்றையும் காண்பித்தார். போலீசார் ஆய்வு செய்த போது அந்த கடிதம் ஆசிப் சேக்கால் எழுதப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வாலிபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
தலை துண்டித்து உடல் வீச்சு
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கர்நாடகாவை சேர்ந்த தாய், தந்தை இல்லாத சானியா சேக்கை, ஆசிப் சேக் திருமணம் செய்து உள்ளார். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. சவுதி அரேபியால் வேலை பார்த்த ஆசிப் சேக் கொரோனா ஊரடங்கின் போது நாலச்சோப்ரா வந்து உள்ளார். இதில் கடந்த ஆண்டு ஜூலை 21-ந் தேதி வீட்டில் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ஆசிப் சேக் மனைவியை கொலை செய்து உள்ளார். பின்னர் தலையை துண்டித்து உடலை மட்டும் டிராலி பேக்கில் வைத்து நாலச்சோப்ரா கழிமுகப்பகுதியில் வீசி உள்ளார். மேலும் நாலச்சோப்ரா வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் மும்ராவுக்கு இடம் பெயர்ந்து உள்ளார்.
இந்தநிலையில் கர்நாடகாவில் உள்ள சானியா சேக்கின் உறவினர்கள் அவரை ஒரு ஆண்டாக தொடர்பு கொள்ள முயன்று உள்ளனர். ஆனால் அவர்களால் சானியா சேக்கை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவர்கள் நாலச்சோப்ரா வந்து போலீசில் கொடுத்த புகாரால் தான் சானியா சேக் கணவரால் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மனைவியை கொலை செய்த ஆசிப் சேக்கை போலீசார் உடல் மீட்கப்பட்ட 14 மாதங்களுக்கு பிறகு கைது செய்தனர். மேலும் ஆசிப் பெண்ணின் தலையை எங்கு வீசினார், கொலையில் ஆசிப் சேக்கின் குடும்பத்தினருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.