கோண்டியாவில் சுயேச்சை எல்.எல்.ஏ. அலுவலக கதவு உடைப்பு

கோண்டியாவில் சுயேச்சை எல்.எல்.ஏ. அலுவலக கதவு நபர்களால் உடைக்கப்பட்டது.;

Update:2022-06-27 22:53 IST

கோண்டியா, 

சிவசேனா, மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சி அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தி சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அவர்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளதால் மராட்டிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை கண்டித்து சிவசேனா தொண்டர்கள் பல்வேறு இடங்களில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வீடுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் கோண்டியாவில் சுயேச்சை எம்.எல்.ஏ. வினோத் அகர்வாலின் அலுவலகத்திற்கு வெளியே  பிற்பகல் 1.30 மணி அளவில் குவிந்த 7 பேர் கொண்ட கும்பல் அலுவலக நுழைவாயிலில் இருந்த காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அலுவலகத்தின் கதவுகளை அவர்கள் அடித்து உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் நடைபெற்ற போது வினோத் அகர்வால் மும்பையில் இருந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து அவரது ஆதரவாளர்கள் கோண்டியா நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜூன் 23-ந் தேதி எம்.எல்.ஏ. வினோத் அகர்வால், பா.ஜனதா தலைவர் தேவேந்திர பட்னாவிசுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்