ரூ.500-ஐ கடன் தகராறில் குப்பை பொறுக்கும் தொழிலாளி கொலை; நண்பர் கைது
ராய்காட் பன்வெல் பகுதியில் ரூ.500-ஐ கடன் தகராறில் குப்பை பொறுக்கும் தொழிலாளியை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்;
தானே,
ராய்காட் மாவட்டம் பன்வெல் ரெயில் நிலையம் அருகே பலத்த காயத்துடன் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக கடந்த 8-ந் தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தவர் குப்பை பொறுக்கும் தொழிலாளியான விக்கி சிந்தாலாயா (வயது27) என்பதும், அவர் ரெயில் நிலையம் அருகே வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவரை யாரோ கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை செய்த நபர் யார் என்பதை கண்டுபிடிக்க அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் விக்கி சித்தாலாயாவின் நண்பரான சச்சின் ஷிண்டே (30) என்பவர் தான் இந்த கொலையை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவுரங்காபாத்தில் பதுங்கி இருந்த சச்சின் ஷிண்டேவை போலீசார் கைது செய்தனர். அவர் கடனாக கொடுத்த ரூ.500-ஐ விக்கி சிந்தாலாயா திருப்பி தர மறுத்து உள்ளார். இதனால் அவரை பழிவாங்க திட்டமிட்ட சச்சின் ஷிண்டே மது குடிக்க வைத்து தாக்கி கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.