வாலிபர் மீது கும்பல் கொலை வெறி தாக்குதல்

மராட்டியத்தில் வாலிபர் மீது கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. வாலிபர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் பதிவிட்டதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Update: 2022-08-06 13:26 GMT

மும்பை, 

மராட்டியத்தில் வாலிபர் மீது கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. வாலிபர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் பதிவிட்டதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

வாலிபர் மீது தாக்குதல்

மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டம் கர்ஜத் பகுதியில் உள்ள அக்காபாய் சவுக் அருகில் சம்பவத்தன்று சன்னி ராஜேந்திர பவார் (வயது23) என்ற வாலிபர், நண்பர் அமித் மானேவுடன் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 14 பேர் கும்பல் சன்னி ராஜேந்திர பவாரை வாள், கம்பி, ஆக்கி மட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் பயங்கரமாக தாக்கியது. படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நுபுர்சர்மா விவகாரம் காரணமா?

இந்தநிலையில் சன்னி ராஜேந்திர பவார், நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜனதா முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் பதிவிட்டதால் தான் அவரை கும்பல் தாக்கியதாக அவரது நண்பர் குற்றம் சாட்டி உள்ளார்.

இதேபோல நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய அமராவதி மருந்துக்கடைக்காரர் உமேஷ் கோல்கேவுக்கு ஏற்பட்ட கதிதான் வாலிபருக்கும் ஏற்படும் என தாக்குதல் நடத்திய கும்பல் மிரட்டியதாக கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசாா் 4 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் பலரை தேடி வருகின்றனர். நுபுர் சர்மா விவகாரத்தில் தான் வாலிபர் மீது தாக்குதல் நடந்தது என தற்போதே கூற முடியாது என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், " சன்னி ராஜேந்திர பவார் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன. இதுவரை அவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் போட்ட பதிவை நாங்கள் பார்க்கவில்லை. எனவே அவரது பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதள கணக்குகளை ஆய்வு செய்து வருகிறோம். வாலிபருக்கும், வழக்கில் தொடர்புடைய கும்பலுக்கும் முன்விரோதம் இருந்து உள்ளது. அதனால் கூட வாலிபர் தாக்கப்பட்டு இருக்கலாம் " என்றார்.

இந்தநிலையில் சன்னி ராஜேந்திர பவார் மீது கும்பல் நடத்திய தாக்குதலுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. நிதேஷ் ரானே கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்