ஆரே காலனியில் விநாயகர் சிலை கரைப்பு விவகாரம்; சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க எடுத்த நடவடிக்கை என்ன? - மாநகராட்சிக்கு, ஐகோர்ட்டு கேள்வி
ஆரே காலனியில் விநாயகர் சிலை கரைப்பு விவகாரத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க எடுத்த நடவடிக்கை என்ன என்று மாநகராட்சிக்கு, ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
மும்பை,
ஆரே காலனியில் விநாயகர் சிலை கரைப்பு விவகாரத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க எடுத்த நடவடிக்கை என்ன என்று மாநகராட்சிக்கு, ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
பொதுநலன் மனு
மராட்டியத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவின்போது மண்டல்களில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கொண்டு சென்று கரைக்கப்படுவது வழக்கம். இந்தநிலையில் மும்பை மாநகராட்சி ஆரே காலனி பகுதியில் உள்ள நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து வனசக்தி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த பொதுநல வழக்கு நீதிபதி டி.கே. உபாத்யாய் மற்றும் நீதிபதி ஆரிப் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
பிரமாண பத்திரம்
அப்போது நீதிபதிகள், "நீர்நிலைகளில் மக்காத பொருட்களை கரைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளன. அப்படி இருக்கும்போது மாநகராட்சி எப்படி அனுமதி வழங்கியது என்பது ஆச்சரியமாக உள்ளது. இந்த முடிவில் சட்டப்பூர்வ அறிவிப்பு மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்க இயற்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க எடுத்த நடவடிக்கை என்ன என்பதை குறிப்பிட்டு மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும்" என்று உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.