வியாபாரி தற்கொலை வழக்கில் ரூ.25 லட்சம் மோசடி செய்த நண்பர் கைது

வியாபாரி தற்கொலை வழக்கில் ரூ.25 லட்சம் மோசடி செய்த நண்பர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-09-05 19:45 GMT

மும்பை, 

வியாபாரி தற்கொலை வழக்கில் ரூ.25 லட்சம் மோசடி செய்த நண்பர் கைது செய்யப்பட்டார்.

ரூ.25 லட்சம்

தானே மாவட்டம் பயந்தரை சேர்ந்தவர் கிரிதர் சோலங்கி (வயது58). வியாபாரி. இவரது பால்ய நண்பர் சந்திரகாந்த் (58). அரசு ஊழியரான இவருக்கு அவசரமாக பணஉதவி தேவைப்பட்டது. இதனால் கிரிதர் சோலங்கி கடந்த 2015-ம் ஆண்டு தனது வீட்டை வங்கியில் அடமானம் வைத்து ரூ.25 லட்சத்தை வாங்கி கொடுத்தார். இந்த பணத்தை வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் திருப்பி தருவதாக கூறினார். ஆனால் கூறியப்படி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

தற்கொலை

இதற்கிடையே வங்கியில் பணத்தை கட்ட தவறியதால் கிரிதர் சோலங்கிக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது. இறுதியாக கடனை செலுத்த முடியாமல் போனதால் வீட்டை ஜப்தி செய்வதாக வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இதனால் மனஉளைச்சல் அடைந்த அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த மாதம்  25-ந்தேதி உயிரிழந்தார்.

நண்பர் கைது

இதனால் பாதிக்கப்பட்ட கிரிதர் சோலங்கியின் குடும்பத்தினர் பணத்தை வாங்கி மோசடி செய்த சந்திரகாந்த் மீது நவ்கர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் போலீசார் சந்திரகாந்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்