மின்கட்டணம் செலுத்தவில்லை என கூறி ரூ.2 லட்சம் மோசடி; அரியானாவில் 2 பேர் சிக்கினர்
மின்கட்டணம் செலுத்தவில்லை என கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் அரியானாவில் கைது செய்தனர்.
மும்பை,
மின்கட்டணம் செலுத்தவில்லை என கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் அரியானாவில் கைது செய்தனர்.
ரூ.2 லட்சம் பறிப்பு
மும்பையை சேர்ந்த ஒருவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் அடையாளம் தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. இதில், எதிர்முனையில் பேசியவர் மின்கட்டணம் செலுத்தவில்லை என கூறி ரூ.2 லட்சத்தை பறித்து உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட நபர் மும்பை போலீசில் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரின்பேரில் மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்த கும்பலை பிடிக்க வங்கி கணக்கு விவரங்கள், யுபிஐ பதிவுகள், செல்போன் நம்பர்களை ஆய்வு செய்தனர்.
2 பேர் கைது
இந்த கும்பல் அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டம் மண்டி அடம்பூர் தாலுகா பாதக் மற்றும் சடல்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. தனிப்படை போலீசார் அங்கு சென்று பாதக் கிராமத்தை சேர்ந்த நவின் பிஷ்னோய்(வயது33), சடல்பூர் கிராமத்தை சேர்ந்த ராகேஷ்(21) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் மும்பை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஒரு வாரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இதே பாணியில் மும்பையை சேர்ந்த பலரிடம் கைவரிசை காட்டி பணமோசடி செய்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.