அன்னிய செலாவணி மோசடி வழக்கு: அனில் அம்பானி மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை
அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக தொழில் அதிபர் அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.;
மும்பை,
அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக தொழில் அதிபர் அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
அன்னிய செலாவணி மோசடி
ரிலையன்ஸ் ஏ.டி.ஏ. குழும அதிபர் அனில் அம்பானிக்கு எதிராக அமலாக்கத்துறை அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அனில் அம்பானிக்கு வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் மற்றும் முதலீடு தொடர்பாக இந்த விசாரணை நடந்து வருகிறது. அன்னிய செலாவணி வழக்கு விசாரணைக்கு நேற்று முன்தினம் அனில் அம்பானி ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
மனைவியிடம் விசாரணை
இந்தநிலையில் நேற்று அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. விசாரணைக்காக, அவர் நேற்று காலை தென்மும்பை பல்லர்டு எஸ்டேட் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்தார். அவரிடம் வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் மற்றும் முதலீடுகள் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கருப்பு பணம் பதுக்கிய வழக்கில் வருமான வரித்துறை அனில் அம்பானி மற்றும் அவரது மனைவிக்கு வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள், முதலீடுகள் பற்றி விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.