புனேயில், எலக்ட்ரிக் கடையில் பயங்கர தீ: 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் பலி - ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்

புனேயில் எலக்ட்ரிக் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் உடல் கருகி பலியாகினர். இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

Update: 2023-08-30 18:45 GMT

புனே, 

புனேயில் எலக்ட்ரிக் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் உடல் கருகி பலியாகினர். இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

தீ விபத்து

புனே மாவட்டம் பிம்பிரி-சிஞ்ச்வாட் பூர்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் கீழ் தளத்தில் எலக்ட்ரிக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் இந்த கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, எலக்ட்ரிக் கடையின் அருகே தரை தளத்தில் படுத்து உறங்கி கொண்டிருந்த 4 பேர் தீயில் சிக்கி உடல் கருகி இறந்து கிடந்ததை தீயணைப்பு படையினர் கண்டனர். உடனடியாக 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

4 பேர் பலி

இதற்கிடையே கடையில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், பலியானவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிம்னா ராம் சவுத்ரி(வயது48), அவரது மனைவி நம்ரதா(40), மகன்கள் பாவேஷ்(15), சச்சின்(13) ஆகியோர் என்பது தெரியவந்தது. தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்