ஓடும் ரெயிலில் 4 பேரை சுட்டுக்கொலை செய்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு உண்மை கண்டறியும் சோதனை; அனுமதி கோரி போலீசார் கோர்ட்டில் மனு

போலீஸ் அதிகாரி, 3 பயணிகளை சுட்டுக்கொலை செய்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும் என ரெயில்வே போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

Update: 2023-08-10 20:45 GMT

மும்பை, 

போலீஸ் அதிகாரி, 3 பயணிகளை சுட்டுக்கொலை செய்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும் என ரெயில்வே போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

அதிகாரி, பயணிகள் சுட்டுக்கொலை

ஜெய்பூர் - மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 31-ந் தேதி அதிகாலை பால்கர் அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது ரெயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் சேத்தன் சிங், தனது உயர் அதிகாரி திகாராம் மீனாவுடன் ஏற்பட்ட தகராறில் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார். மேலும் ரெயிலில் பயணம் செய்த அப்பாவி பயணிகள் 3 பேரை சுட்டுக்கொலை செய்து வெறிச்செயலில் ஈடுபட்டார். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கி துப்பாக்கியுடன் தப்பியோட முயன்ற அவரை ரெயில்வே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். போலீசார் சேத்தன் கிங் கொலை மட்டுமில்லாமல் இருபிரிவினர் இடையே மோதலை தூண்டுதல், ஆள்கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உண்மை கண்டறியும் சோதனை

இந்தநிலையில் சேத்தன் சிங்கிற்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கேட்டு ரெயில்வே போலீசார் போரிவிலி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர். ரெயில் துப்பாக்கி சூடு சம்பவம் மிகவும் தீவிரமான பிரச்சினை என்பதால் அதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. அதே நேரத்தில் சேத்தன் சிங்கிற்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி வழங்க அவரது தரப்பு வக்கீல்கள் அமித் மிஸ்ரா, ஆசாத் குப்தா எதிர்ப்பு தெரிவித்தனர். சேத்தன் சிங் 11 நாட்களாக காவலில் இருந்த போது போலீசார் அவரிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை என கேள்வி எழுப்பினர். வல்லுநர்கள் பரிந்துரையை கேட்ட பிறகு தான் இதுபோன்ற சோதனைக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட கோர்ட்டு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்