நிர்வாண வீடியோவை பரப்புவதாக மிரட்டி மனைவியை இழந்தவரிடம் ரூ.5¼ லட்சம் பறிப்பு
நிர்வாண வீடியோவை பரப்பிவிடுவோம் என மிரட்டி மர்ம கும்பல் மனைவியை இழந்தவரிடம் ரூ.5¼ லட்சம் பறித்து உள்ளது.;
மும்பை,
நிர்வாண வீடியோவை பரப்பிவிடுவோம் என மிரட்டி மர்ம கும்பல் மனைவியை இழந்தவரிடம் ரூ.5¼ லட்சம் பறித்து உள்ளது.
முகநூல் பழக்கம்
மும்பை அந்தேரி பகுதியில் 54 வயது நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு உயிரிழந்துவிட்டார். இந்தநிலையில் சமீபத்தில் அவருக்கு முகநூல் மூலம் பெண் ஒருவர் அறிமுகம் ஆனார். பின்னர் 2 பேரும் வாட்ஸ்அப் மூலம் பேசி வந்தனர். சம்பவத்தன்று அந்த பெண் வாட்ஸ்அப்பில் வீடியோ கால் செய்து, 54 வயது நபரின் ஆடைகளை கழற்றுமாறு கூறியுள்ளார். 54 வயது நபரும் பெண் கூறியபடி ஆடைஇன்றி வீடியோ காலில் பெண்ணுடன் பேசி உள்ளார்.
இந்தநிலையில் அந்த வீடியோ காலை பதிவு செய்த பெண், அந்த காட்சிகளை சமூகவலைதளத்தில் பரப்பாமல் இருக்க ரூ.30 ஆயிரம் தருமாறு நபரிடம் மிரட்டினார். இதையடுத்து அவர் பெண் கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பினார்.
ரூ.5¼ லட்சம் பறிப்பு
இந்தநிலையில் சில நாட்களில் சி.பி.ஐ. அதிகாரி என ஒருவர் நபரை தொடர்பு கொண்டு நிர்வாண வீடியோ கால் விவகாரத்தை வைத்து பணம் கேட்டு மிரட்டினார். நபரும் பயந்து போய் ரூ.5 லட்சம் வரை அவருக்கு கொடுத்தார்.
இந்தநிலையில் சி.பி.ஐ. அதிகாரி என கூறியவர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் 54 வயது நபர் சம்பவம் குறித்து அந்தேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்வாண வீடியோவை பரப்பிவிடுவோம் என மிரட்டி மனைவியை இழந்தவரிடம் ரூ.5¼ லட்சம் பறித்த பெண் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.