சரக்கு மற்றும் சேவை வரி தீர்ப்பாய நீதிபதியிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டல்; விற்பனை வரி இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

சரக்கு மற்றும் சேவை வரி தீர்ப்பாய நீதிபதியிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய விற்பனை வரித்துறை இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-09-03 19:00 GMT

மும்பை, 

சரக்கு மற்றும் சேவை வரி தீர்ப்பாய நீதிபதியிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய விற்பனை வரித்துறை இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பணம் கேட்டு மிரட்டல்

நாக்பூரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) தீர்ப்பாயத்தின் நீதிபதியாக இருப்பவர் ரமேஷ் பாகு சாயித் (வயது59). நீதிபதிக்கு சமீபத்தில் மாநில விற்பனை வரித்துறை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் திவாசேயிடம் இருந்து குறுந்தகவல் ஒன்று வந்தது. அந்த குறுந்தகவலில் அவர், நீதிபதியிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டி இருந்தார். மேலும் பணத்தை கொடுக்கவில்லை எனில் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறுவோம் எனவும், உங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் கூறியிருந்தார். இதுதொடர்பாக நீதிபதி போலீசில் புகார் அளித்தார். போலீசார் நீதிபதியை மிரட்டியதாக விற்பனை வரித்துறை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் திவாசே, அவரது கூட்டாளி பிரகாஷ் கெய்க்வாட் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணியிட மாற்ற விவகாரம்

நீதிபதி ரமேஷ் பாகு சாயித் விற்பனை வரித்துறை இணை கமிஷனராக இருந்தபோது, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் திவாசே பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தனது பணியிட மாற்றத்தை நிறுத்தி வைக்குமாறு ராஜ்குமார் திவாசே, ரமேஷ் பாகு சாயித்திடம் கோரிக்கை விடுத்தாா். ஆனால் அந்த கோரிக்கையை ரமேஷ் பாகு சாயித் நிராகரித்து விட்டார். இதையடுத்து சரக்கு மற்றும் சேவை வரி தீர்ப்பாய நீதிபதியாக பணியிட மாற்றம் பெற்று சென்ற அவரை, கூட்டாளியுடன் சேர்ந்து ராஜ்குமார் திவாசே பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்