சத்தீஸ்கரில் இருந்து நாக்பூர் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது- பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்
சத்தீஸ்கரில் இருந்து நாக்பூர் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.;
நாக்பூர்,
சத்தீஸ்கரில் இருந்து நாக்பூர் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தடம் புரண்டு விபத்து
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவில் இருந்து மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள இத்வாரிக்கு சிவ்நாத் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் நேற்று அதிகாலை 3.42 மணியளவில் சத்தீஸ்கரில் உள்ள டோன்கர்கார்க் பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது, எதிர்பாராதவிதமாக தடம்புரண்டு விபத்தில் சிக்கியது.
ரெயிலின் என்ஜினுக்கு அடுத்து இருந்த 2 பெட்டிகளின் 5 சக்கரங்கள் தடம் புரண்டன.
பெட்டிகள் அகற்றம்
விபத்து நடந்த போது 2 பெட்டிகளிலும் சுமார் 40 பயணிகள் இருந்தனர். எனினும் ரெயில் மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இந்தநிலையில் தகவல் அறிந்து நாக்பூர் மற்றும் கோண்டியாவில் இருந்து மீட்பு ரெயில்கள் விரைந்தன. அவர்கள் தடம்புரண்ட பெட்டிகளை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன் பிறகு ரெயில் அங்கு இருந்து நாக்பூர் நோக்கி புறப்பட்டது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரி ஒருவர் கூறினார்.