கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு கட்டாயம்- மராட்டிய அரசு முடிவு

மராட்டிய கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு கட்டாயமாக்கப்படும் என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

Update: 2022-11-25 18:45 GMT

மும்பை, 

மராட்டிய கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு கட்டாயமாக்கப்படும் என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

தேசிய கல்வி கொள்கை

மராட்டிய மாநில கவர்னர் மாளிகையில் நேற்று வேளாண் சாரா பல்கலைக்கழக துணை வேந்தர்களின் கூட்டம் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மாநில உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, மராட்டியத்தில் தேசிய கல்வி கொள்கை சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும் என்று பேசினார்.

மந்திரி சந்திரகாந்த பாட்டீல் பேசியதாவது:-

கட்டாயமாகிறது

மாணவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு விகிதம் குறைவாக உள்ளது. எனவே மாநில அரசு ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளது. இந்த தீர்மானத்தின்படி 18 வயது நிரம்பிய மாணவர்கள் கல்லூரியில் சேர வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட உள்ளது.

உயர் கல்வி படிக்கும் 50 லட்சம் மாணவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மராட்டியத்தில் 32 லட்சம் மாணவர்கள் தான் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து உள்ளனர். மாணவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு தொடர்பாக பல்கலைக்கழகங்கள் முகாம்கள் நடத்த வேண்டும்.

4 ஆண்டு பட்டப்படிப்பு

தேசிய கல்வி கொள்கையில் 4 ஆண்டு பட்டப்படிப்பை கட்டாயமாக்கி உள்ளது. எனவே அடுத்த கல்வி ஆண்டு (2023) முதல் மராட்டிய அரசு 4 ஆண்டு பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது. பல்கலைக்கழகங்கள் இந்த முடிவை அமல்படுத்தி தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்