எல்கர் பரிஷத் வழக்கு: பாடகி ஜோதி ஜக்தாப்பின் ஜாமீன் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட மேடை பாடகி ஜோதி ஜக்தாப்பின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Update: 2022-10-17 18:45 GMT

மும்பை, 

எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட மேடை பாடகி ஜோதி ஜக்தாப்பின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

16 பேர் கைது

புனேயில் உள்ள பீமா- கோரேகாவ் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வன்முறை வெடித்தது.

இந்த வன்முறைக்கு முந்தையநாள் இரவு நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாடு தான் காரணம் எனவும், இந்த கூட்டத்தை நடத்தியவர்களுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகவும் போலீசார் குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கு தொடர்பாக 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரசுக்கு எதிராக போராட்டம்

இதில் மேடை பாடகியும், சமூக ஆர்வலருமான ஜோதி ஜக்தாப் (வயது 34) என்பவரும் ஒருவர். இவர் தற்போது பைகுல்லா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ். கட்காரி மற்றும் எம்.என். ஜாதவ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை அவரது ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

அவர்கள் தங்கள் வாதத்தில், "ஜோதி ஜக்தாப் மாவோயிஸ்ட் அமைப்பின் தீவிர உறுப்பினராவர். எல்கர் பரிஷத் பொதுக்கூட்டத்தில் அரசுக்கு எதிராக போராட தலித்துகளை அணி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். தடை செய்யப்பட்ட கபீர் கலா மஞ்ச் உறுப்பினர்களுடன் இணைந்து கிளர்ச்சியூட்டும் முழங்கங்களை கொண்ட பாடல்களை பாடியுள்ளார்" என குற்றம் சாட்டினர்.

மனு தள்ளுபடி

ஆனால் ஜோதி ஜக்தாப் சார்பில், கபீர் கலா மஞ்ச் ஒரு கலாசார குழு, இது மத நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பின்மையை இசை மற்றும் கவிதை மூலம் இந்திய சமூகத்தில் மீண்டும் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், தேசிய புலனாய்வு முகமையின் முதற்கட்ட விசாரணை அறிக்கையில் உண்மை தன்மை இருப்பதாக கருதுவதால் ஜோதி ஜக்தாப்பின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பு வழங்கினர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்த பாதிரியார் ஸ்டான் சுவாமி கடந்த ஆண்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது உயிரிழந்தார். வழக்கில் இருந்து சுதா பரத்வாஜ் மற்றும் வரவர ராவ் ஆகியோரும் ஜாமீனில் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்