சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை டோலி கட்டி ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்த அவலம்- நடுகாட்டில் குழந்தை பெற்றெடுத்தார்

சாலை வசதி இல்லாத கிராமத்தில் டோலி கட்டி தூக்கி வரப்பட்ட பழங்குடியின கர்ப்பிணி பெண் நடுக்காட்டில் குழந்தையை பெற்றெடுத்தார்.

Update: 2022-09-12 13:32 GMT

மும்பை,

சாலை வசதி இல்லாத கிராமத்தில் டோலி கட்டி தூக்கி வரப்பட்ட பழங்குடியின கர்ப்பிணி பெண் நடுக்காட்டில் குழந்தையை பெற்றெடுத்தார்.

டோலி கட்டி தூக்கி சென்றனர்

பால்கர் மாவட்டம் ஜவகர் தாலுகாவில் உள்ள எய்னா கிராமத்தை சேர்ந்த 21 வயது பழங்குடியின பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு கடந்த சனிக்கிழமை நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்டது. எய்னா கிராமத்தில் இருந்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சாலை வசதி இல்லை என கூறப்படுகிறது.

எனவே கிராமத்தினர் அதிகாலை 3 மணியளவில் டோலி கட்டி சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அடர்ந்த காடு வழியாக கர்ப்பிணியை தூக்கி சென்றனர்.

நடுகாட்டில் பிரசவம்

உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாததால், நடுக்காட்டில் பெண்ணுக்கு பிரசவம் ஏற்பட்டது. அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை பெண்ணும், குழந்தையும் ஜவகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாயும், சேயும் நலமாக இருப்பதாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் கூறினர்.

தடுக்க நடவடிக்கை

கடந்த மாதம் பால்கர் மாவட்டம் மொகாடா தாலுகாவிலும் இதேபோல சாலை வசதி இல்லாததால் 25 வயது கர்ப்பிணி பெண் டோலி கட்டி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். சரியான நேரத்தில் ஆஸ்பத்திரி செல்ல முடியாததால், பாதி வழியிலேயே பிரசவம் ஏற்பட்டு இரட்டை குழந்தைகள் இறந்து பிறந்தன.

எனவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சுகாதார துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பால்கர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வைதேகி வாதான் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்