மும்பையில் 24 மணி நேரத்துக்கு மேல் குடிநீர் வினியோகம் பாதிப்பு; பொதுமக்கள் கடும் அவதி
மும்பையில் 24 மணி நேரத்துக்கு மேல் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். கடைகளில் தண்ணீர் பாட்டீல்கள் விற்று தீர்ந்தன.;
மும்பை,
மும்பையில் 24 மணி நேரத்துக்கு மேல் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். கடைகளில் தண்ணீர் பாட்டீல்கள் விற்று தீர்ந்தன.
குடிநீர் வினியோகம் பாதிப்பு
பாண்டுப் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணியை மும்பை மாநகராட்சி மேற்கொண்டது. பராமரிப்பு பணியையொட்டி தமிழர்கள் அதிகம் உள்ள தாராவி உள்பட அந்தேரி, ஜோகேஸ்வரி, மலாடு, ஜூகு, போரிவிலி, பாந்திரா, மாகிம், தாதர் உள்பட 12 வார்டு பகுதிகளில் திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாட்களுக்கு குடிநீர் வெட்டு அறிவிக்கப்பட்டு இருந்தது.
திங்கள் மாலை, செவ்வாய்கிழமை காலை தண்ணீர் வினியோகம் இருக்காது என மாநகராட்சி தெரிவித்து இருந்தது. ஆனால் குறிப்பிட்ட நேரத்துக்குள் பராமரிப்பு பணியை முடிக்காததால் நேற்று மாலையும் மும்பையில் பெரும்பாலான இடங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை.
தண்ணீர் பாட்டில்கள் விற்பனை
இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். பெரும்பாலான மக்கள் மாலை தண்ணீர் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் வீட்டில் இருந்த தண்ணீர் அனைத்தையும் செலவு செய்து விட்டனர். இந்தநிலையில் முன் அறிவிப்பு இன்றி மாலையிலும் தண்ணீர் வராததால் பலர் அதிர்ச்சி அடைந்தனர். பல வீடுகளில் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் இருந்தனர்.
இதனால் கடைகளில் தண்ணீர் பாட்டில்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. ஒரு, சில இடங்களில் கூடுதல் விலைக்கு தண்ணீர் பாட்டில் விற்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மும்பையில் சுமார் 42 ஆண்டுகளுக்கு பிறகு 24 மணி நேரத்துக்கு மேல் குடிநீர் வினியோகம் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் கூறினார்.