துல்ஜா பவானி கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு
துல்ஜாப்பூரில் உள்ள துல்ஜா பவானி கோவிலில் அநாகரீகமான ஆடை அணிந்து வர கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
அவுரங்காபாத்,
துல்ஜாப்பூரில் உள்ள துல்ஜா பவானி கோவிலில் அநாகரீகமான ஆடை அணிந்து வர கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஆடை கட்டுப்பாடு
உஸ்மனாபாத்தில் உள்ள துல்ஜாப்பூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற துல்ஜா பவானி கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டுக்காக வருகை தருகின்றனர். இந்த கோவிலுக்குள் நுழைய ஆடை கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் விதித்துள்ளது. இது குறித்து அறிவிப்பு பலகை கோவிலில் வைக்கப்பட்டு உள்ளது. மராத்தி மொழியில் வைக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு பலகையில், "கோவிலுக்கு அநாகரீகமாக உடல் பாகங்கள் தெரியும் வகையிலான ஆடைகள், அரை பேன்ட் மற்றும் பெர்முடாஸ் போன்றவற்றை அணிந்துவரும் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தயவு செய்து நமது இந்திய கலாசாரத்தை மனதில் வைத்து செயல்படுங்கள்" என்று எழுதப்பட்டு உள்ளது.
அதிகாரி விளக்கம்
இது குறித்து கோவிலின் மக்கள் தொடர்பு அதிகாரி நாகேஷ் ஷிடோல் கூறுகையில், "அறிவிப்பு பலகை மக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. நாம் பக்தியுடன் கோவிலுக்கு செல்கிறோம். கோவிலின் புனிதம் காக்கப்பட வேண்டும். எனவே துல்ஜா பவானி கோவிலில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற விதிமுறைகள் நாடு முழுவதும் பல்வேறு கோவில்களில் ஏற்கனவே உள்ளது" என்றார். துல்ஜா பவானி கோவிலில் பிரார்த்தனை செய்ய சோலாப்பூரில் இருந்து வந்த பக்தரான பிரதிபா மகேஷ் கோவிலின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார். அவர் கூறுகையில், "இந்த முடிவு நமது கலாசாரத்தை பாதுகாக்க உதவும். நான் அதை வரவேற்கிறேன்" என்றார்.