தடியடி நடத்த உத்தரவிட்டவர்களை மரத்வாடாவுக்குள் நுழைய விடாதீர்கள் - ராஜ் தாக்கரே ஆவேசம்

ஜல்னாவில் தடியடி நடத்த உத்தரவிட்டவர்களை மரத்வாடாவுக்குள் நுழைய விடாதீர்கள் என ராஜ் தாக்கரே ஆவேசமாக கூறியுள்ளார்.

Update: 2023-09-04 19:15 GMT

மும்பை, 

ஜல்னாவில் தடியடி நடத்த உத்தரவிட்டவர்களை மரத்வாடாவுக்குள் நுழைய விடாதீர்கள் என ராஜ் தாக்கரே ஆவேசமாக கூறியுள்ளார்.

போராட்டக்காரர்களுடன் சந்திப்பு

மராட்டியத்தில் மராத்தா சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்டு பல ஆண்டுகளாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்னா மாவட்டம் அன்டர்வாலி சாரதி கிராமத்தில் கடந்த சில நாட்களாக மனோஜ் ஜாரங்கே என்பவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக மராத்தா சமூகத்தினரும் அங்கு திரண்டு இருந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை மனோஜ் ஜாரங்கேயை அப்புறப்படுத்த போலீசார் சென்றனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 360-க்கும் அதிகமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்தநிலையில் மராத்தா இடஒதுக்கீடுக்காக உண்ணாவிரதம் இருந்து வரும் மனோஜ் ஜாரங்கேயை நேற்று நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே சந்தித்தார். அவர் இடஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மராத்தா சமூகத்தினரையும் சந்தித்து பேசினார்.

மரத்வாடாவுக்குள் விடாதீர்கள்

அப்போது அவர் ஜல்னாவில் தடியடி நடத்த உத்தரவிட்டவர்களை மரத்வாடாவுக்குள் நுழைய விட வேண்டாம் என கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- தலைவர்கள் ஓட்டு கேட்ட பின்னர், உங்களை கைவிட்டு விடுகின்றனர். உங்கள் மீது தடியடி நடத்தவும், துப்பாக்கியை காட்டி ஓடவிடவும் உத்தரவிட்டவர்களை நீங்கள் மரத்வாடாவுக்குள் நுழையவிடக் கூடாது. தலைவர்கள் மன்னிப்பு கேட்கும் வரை நீங்கள் அவர்களை நுழையவிட கூடாது. அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜி சிலை வைப்பதாக கூறி முன்பு அரசியல்வாதிகள் உங்களிடம் ஓட்டு கேட்டார்கள். நீங்கள் ஓட்டுப்போட்ட பிறகு உங்கள் கோரிக்கைகளை அவர்கள் கண்டுகொள்வதில்லை. தடியடி விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார். ஆனால் அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தால் இதை தானே செய்து இருப்பார். போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை கேட்டேன். சட்டப்பூர்வமான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்த பிறகு, இதுதொடர்பாக முதல்-மந்திரியிடம் பேசுவேன். இப்போது தேர்தல் எதுவுமில்லை. தேர்தல் வரும் போது லத்தி தடத்தை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்