சிவசேனாவின் இருதரப்பு எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு விசாரணை- சபாநாயகர் தொடங்கினார்

சிவசேனாவின் இருதரப்பு எம்.எல்.ஏ.க்கள் தொடர்புடைய தகுதிநீக்க விசாரணையை சபாநாயகர் ராகுல் நர்வேகர் நேற்று தொடங்கினார்.

Update: 2023-09-14 18:45 GMT

மும்பை, 

சிவசேனாவின் இருதரப்பு எம்.எல்.ஏ.க்கள் தொடர்புடைய தகுதிநீக்க விசாரணையை சபாநாயகர் ராகுல் நர்வேகர் நேற்று தொடங்கினார்.

தகுதிநீக்க வழக்கு

சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏ.க்களின் அதிருப்தி காரணமாக கவிழ்ந்தது. இந்த நெருக்கடியான நேரத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு, ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க நடவடிக்கை எடுத்தது. இதேபோல ஷிண்டே தரப்பினர், உத்தவ் தாக்கரே எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக் கோரினர்.

இந்த நிலையில் ஷிண்டே தலைமையிலான அணி பா.ஜனதாவுடன் கைகோர்த்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியானார். ஆனால் இந்த தகுதிநீக்கம் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு தகுதிநீக்கம் குறித்து சபாநாயகர் ராகுல் நர்வேகர் நியாயமான காலத்திற்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இருதரப்பு வக்கீல்கள் ஆஜர்

ஆனால் விசாரணை தொடர்ந்து காலம் தாழ்த்தப்பட்டு வந்தது. இது தொடர்பாக உத்தவ் தாக்கரே தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்தநிலையில் சபாநாயகர் ராகுல் நர்வேகர் ஜூலை மாதம் தகுதி நீக்கம் குறித்து பதில் அளிக்குமாறு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த 40 பேருக்கும், உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த 14 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து நேற்று சபாநாயகர் தனது விசாரணையை தொடங்கினார். மும்பையில் மாநில சட்டமன்ற வளாகமான விதான் பவனில் காலை 10.30 மணி அளவில் விசாரணை தொடங்கியது. மதியம் 2 மணி வரை விசாரணை நடந்தது. இரு தரப்பினரும் வக்கீல்கள் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

அடுத்த வாரத்துக்கு தள்ளிவைப்பு

இந்த விசாரணை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்-மந்திரி ஷிண்டே அணியை சேர்ந்த வக்கீல் அனில் சாக்ரே, " எதிர்தரப்பினரிடம் இருந்து உரிய ஆவணங்கள் எங்கள் அணிக்கு கிடைக்கவில்லை" என்றார்.

இதேபோல முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த எம்.எல்.ஏ. வான ரவீந்திர வைகர் கூறுகையில், " ஆவணங்களை பெறவில்லை என்று ஷிண்டே தரப்பினர் குற்றச்சாட்டுவது விசாரணையை தாமதப்படுத்தும் தந்திரத்தின் ஒரு பகுதியாகும். இரு தரப்புக்கும் உரிய அனைத்து ஆவணங்களையும் வழங்குவது சபாநாயகரின் பொறுப்பாகும். அனைத்து மனுக்களையும் தொகுத்து விசாரிக்க வேண்டும்" என்றார். தகுதிநீக்க விசாரணை மீண்டும் அடுத்த வாரம் நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்