பாந்திரா ரெயில் நிலையம் அருகே உத்தவ் கட்சி அலுவலகம் இடித்து அகற்றம் - மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

பாந்திரா ரெயில் நிலைம் அருகே உள்ள உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சி அலுவலகம் உள்பட 8 ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி இடித்து அகற்றியது.

Update: 2023-06-22 20:00 GMT

மும்பை, 

பாந்திரா ரெயில் நிலைம் அருகே உள்ள உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சி அலுவலகம் உள்பட 8 ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி இடித்து அகற்றியது.

ஆக்கிரமிப்புகள்

மும்பை பாந்திரா கிழக்கு ரெயில் நிலைய சாலையில் ஆக்கிரமிப்பு காரணமாக அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் அண்மையில் இணை போக்குவரத்து கமிஷனர் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் ஆலோசனை நடத்தினர். இதில் சாலையில் ஆக்கிரமிப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. முக்கியமாக 3 பெரிய கட்டமைப்புகள், 5 குடிசை வீடுகள் ஆக்கிரமித்து இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று அதனை அகற்றும் பணியில் மாநகராட்சியினர் ஈடுபட்டனர்.

இடித்து அகற்றம்

ரெயில் நிலையம் செல்லும் சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சியின் அலுவலகம் உள்பட 8 ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதன் மூலம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் விரைவில் அப்பகுதியை கடந்து செல்லலாம் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுபற்றி முன்னாள் கவுன்சிலர் முகமது கான் கூறுகையில், "கடந்த 20 ஆண்டாக கட்சியின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. அரசியல் பிரச்சினையில் இடிக்கப்பட்டு உள்ளது" என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்