அனில் பரப் தொடர்புடைய பாந்திரா அலுவலக கட்டிடம் இடிப்பு- திடீர் போராட்டத்தால் பரபரப்பு
முன்னாள் மந்திரி அனில் பரப் தொடர்புடைய பாந்திரா அலுவலக கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து மகாடா முன் திரண்டு திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,
முன்னாள் மந்திரி அனில் பரப் தொடர்புடைய பாந்திரா அலுவலக கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து மகாடா முன் திரண்டு திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
லோக் ஆயுக்தா உத்தரவு
பாந்திரா கிழக்கு மகாடா காலனியில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த முன்னாள் மந்திரி அனில் பரப் சட்டவிரோதமாக அலுவலகம் கட்டி இருப்பதாக பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா லோக் ஆயுக்தாவில் கடந்த 2020-ம் ஆண்டு புகார் அளித்தார்.
இதை தொடா்ந்து லோக் ஆயுக்தா நடத்திய விசாரணையின் போது அனில்பரப் தனக்கும், பாந்திரா அலுவலகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார். 2021-ம் ஆண்டு லோக் ஆயுக்தா சர்ச்சைக்குரிய அலுவலகத்தை இடிக்க உத்தரவிட்டது.
அலுவலகம் இடிப்பு
இந்தநிலையில் லோக் ஆயுக்தா உத்தரவின் பேரில் மகாடா பாந்திரா கிழக்கு மகாடா காலனி பகுதியில் இருந்த சட்டவிரோத கட்டிடத்தை இடித்து உள்ளது. அனில்பரப்பின் சட்டவிரோத அலுவலகம் இடிக்கப்பட்டதாக கிரித் சோமையா தெரிவித்து உள்ளார்.
மகாடாவிடம் இருந்து வந்த கடிதத்தை அடுத்து குடியிருப்பு கட்டிட நிர்வாகமே அலுவலகத்தின் ஒரு பகுதியை இடித்ததாக உத்தவ் தாக்கரே சிவசேனா தரப்பினர் தெரிவித்து உள்ளனர்.
போராட்டம்
அனில் பரப் பயன்படுத்தி வந்த கட்சி அலுவலகம் இடிக்கப்பட்டதை கண்டித்து பாந்திராவில் உள்ள மகாடா அலுவலகம் முன் உத்தவ் தாக்கரே சிவசேனாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மாநில அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
போராட்டம் நடந்த இடத்துக்கு முன்னாள் மந்திரி அனில் பரப்பும் வந்து இருந்தார். அவர் மகாடா அலுவலகத்திற்கும் சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 12-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.