மும்பையில் ஆக்கிரமிப்பை அகற்ற உறுதியான நடவடிக்கை- அதிகாரிகளுக்கு, மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

மும்பை நகரில் ஆக்கிரமிப்பை அகற்ற உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.

Update: 2023-09-14 18:45 GMT

மும்பை,

மும்பை நகரில் ஆக்கிரமிப்பை அகற்ற உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.

ஆக்கிரமிப்பு குழு

மும்பை ஐகோர்ட்டு சமீபத்தில் மாநில அரசுக்கு உத்தரவு ஒன்று பிறப்பித்தது. இந்த உத்தரவில் மும்பை பெருநகரில் பெருகி வரும் ஆக்கிரமிப்புகள் மீதான நடவடிக்கைக்கு தாமதம் ஏன் என கேள்வி எழுப்பியதோடு, விரைவில் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து மாநில அரசு ஆக்கிரமிப்பு அகற்றும் குழு ஒன்றை நியமித்தது. இந்த குழுவிற்கு மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் தேஜ்சிங் பவார், மகாடா துணை கமிஷனர் கலம்பே, உதவி போலீஸ் கமிஷனர் தவுலத் சாகே, விமான நிலைய ஆணைய உதவி பொது மேலாளர் சஞ்சய் பட்டோல் மற்றும் போலீஸ் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உறுதியான நடவடிக்கை

கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் கூறியதாவது:-

மும்பை பெருநகர மேம்பாட்டு ஆணையம், குடிசை மேம்பாட்டு ஆணையம், மகாடா, ரெயில்வே போன்றவற்றின் எல்லையில் வரும் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணிக்கு மும்பை போலீசார் ஒத்துழைப்பு தர வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிவேடுகளை மாநகராட்சி அதிகாரிகள் உரிய முறையில் பராமரிக்க வேண்டும்.

நகரின் தோற்றத்தை கெடுக்கும் வகையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராவை பொருத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Tags:    

மேலும் செய்திகள்