மும்பையில் புதிய இடத்தில் 'தமிழ்நாடு பவன்' கட்ட முடிவு; தமிழக அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

நவிமும்பையில் புதிய இடத்தில் தமிழ்நாடு பவன் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான இடத்தை தமிழக அமைச்சர் எ.வ. வேலு நேரில் ஆய்வு செய்தார்.;

Update: 2023-10-17 20:00 GMT

மும்பை, 

நவிமும்பையில் புதிய இடத்தில் தமிழ்நாடு பவன் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான இடத்தை தமிழக அமைச்சர் எ.வ. வேலு நேரில் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு பவன்

நிதி தலைநகரான மும்பையில் லட்சக்கணக்கில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் மும்பையில் தமிழ்நாடு பவன் இல்லாதது பெரிய குறையாக உள்ளது. நீண்ட காலமாக மும்பையில் தமிழ்நாடு பவன் அமைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. நவிமும்பை கார்கர் பகுதியில் தமிழ்நாடு பவன் கட்ட முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டு இருந்தது. தற்போது வேறு இடத்தில் தமிழ்நாடு பவன் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தநிலையில் தமிழ்நாடு பவன் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்ய தமிழக பொதுப்பணித்துறை மந்திரி எ.வ.வேலு வருகை தந்தார். அவர் கடந்த 2 நாட்களாக நவிமும்பை பகுதியில் தமிழ்நாடு பவன் கட்டுவதற்கான புதிய இடத்தை தேர்வு செய்ய ஆய்வு மேற்கொண்டார்.

புதிய இடத்தால் தாமதம் ஏற்படும்

இந்தநிலையில் புதிய இடத்தை தேர்வு செய்வதால் தமிழ்நாடு பவன் கட்ட மேலும் கால தாமதம் ஆகும் என கேப்டன் தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- 2015-ம் ஆண்டு சண்முகானந்தா அரங்கில் நடந்த விழாவில் நவிமும்பையில் தமிழ்நாடு பவன் கட்ட நிலம் தருவதாக அப்போதைய முதல்-மந்திரி ேதவேந்திர பட்னாவிஸ் உறுதி அளித்தார். இதையடுத்து மராட்டியம், தமிழ்நாட்டுக்கு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ் மூலமாக தமிழ்நாடு பவன் கட்டுவது தொடர்பாக அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தோம். அதன்பிறகு கார்கரில் தமிழ்நாடு பவன் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. அதற்காக தமிழக அரசு ரூ.4 கோடியே 51 லட்சத்து 22 ஆயிரம் செலுத்தி உள்ளது. இந்தநிலையில் தற்போது உள்ள தமிழக அரசு அங்கு தமிழ்நாடு பவன் கட்டாமல், புதிய இடத்தை தேர்வு செய்வது தமிழ்நாடு பவன் கட்டுவதில் மேலும் காலதாமத்தை மட்டுமே ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

காலதாமதம் ஏற்படாது

தமிழ்நாடு பவன் இடம் மாற்றம் குறித்து மும்பை புறநகர் தி.மு.க. செயலாளர் அலிசேக் மீரான் கூறுகையில், "தமிழ்நாடு பவன் கட்ட முடிவு செய்யப்பட்டு இருந்த இடம் கார்கர் பகுதியில் ஒதுக்குபுறமாக இருந்தது. மேலும் அந்த பகுதி யூனியன் பிரதேசங்களுக்கான பவன் கட்ட ஒதுக்கப்பட்ட இடமாகும். தற்போது தேர்வு செய்யப்பட உள்ள இடம் வாஷி பகுதியில் அமைந்து உள்ளது. இடம் மாறுவதால் தமிழ் நாடு பவன் பணி முடிவதில் கால தாமதம் எதுவும் ஏற்படாது. விரைவில் பணிகள் முடிக்கப்படும்" என்றாா்.

Tags:    

மேலும் செய்திகள்