சிறுமியை கற்பழித்து கொலை செய்த வாலிபருக்கு தூக்கு தண்டனை- கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

ஜூகுவில் 9 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

Update: 2022-06-03 17:36 GMT

மும்பை, 

ஜூகுவில் 9 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

சிறுமி கடத்தல்

மும்பை வில்லேபார்லே மேற்கில் உள்ள நேரு நகர் பகுதியை சேர்ந்த தமிழரின் 9 வயது மகள் கடந்த 2019-ம் ஆண்டு கடைக்கு சென்றாள். சிறுமி கடைக்கு சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் கலக்கம் அடைந்தனர். சிறுமியை அக்கம்பக்கத்தில் தேடி பார்த்த போது எங்கும் கிடைக்கவில்லை.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஜூகு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த வடிவேல் என்ற குண்டப்பாவை பிடித்து விசாரித்தனர்.

உடல் மீட்பு

அப்போது அவர் சிறுமியை கற்பழித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள பொது கழிவறை தொட்டியில் இருந்து சிறுமியின் உடலை மீட்டனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக கூப்பர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் சிறுமி கொலை செய்யப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் ஜூகு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் சிறுமியை கற்பழித்து கொலை செய்தவரை தூக்கில் போடுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்சோ சட்டத்தில் வழக்கு

போலீசார் வடிவேல் என்ற குண்டப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் விசாரணையின் போது கைது செய்யப்பட்ட வடிவேல் ஏற்கனவே கற்பழிப்பு வழக்கில் 7 ஆண்டுகள் ஜெயிலில் இருந்தவர் எனவும், அவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரியவந்தது.

கோர்ட்டில் அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும்படியும், மீண்டும் மீண்டும் குற்றத்தை செய்வதால் திருந்தி வாழ எந்த வாய்ப்பு இல்லை என்பதை சுட்டி காட்டி அரசு தரப்பு வக்கீல் வைபவ் பகடே வாதாடினார்.

குற்றவாளி தரப்பில் ஆஜராகி வாதாடிய சுனந்தா அவருக்கு எதிரான நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் இந்த வழக்கு அரிதான வழக்குகளின் கீழ் வராது எனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட கூடாது என வாதிட்டார்.

தூக்கு தண்டனை

இரு தரப்பு விவாதங்களை கேட்ட நீதிபதி எச்.சி ஷிண்டே அவருக்கு சீர்திருத்தம் என்பது சாத்தியமற்றது எனவும், இது அரிதான வழக்கில் கீழ் வருவதால் அவருக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக தீர்ப்பு அளித்து உத்தரவிட்டார்.

பெண்ணை கற்பழித்து கொடூரமாக கொன்றவருக்கு நேற்று தூக்கு தண்டனை விதித்த இதே நீதிபதி தான் தற்போது 2-வது தடவையாக மற்றொரு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்