20 ஏக்கரில் பருத்தி பயிர்களுக்கு இடையே கஞ்சா வளர்ப்பு- 4 விவசாயிகள் கைது

மராட்டியத்தில் 20 ஏக்கர் விவசாய நிலத்தில் பருத்தி மற்றும் துவரம் பருப்பு செடிகளுக்கு இடையே கஞ்சா செடிகள் வளர்த்த 4 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-05 18:45 GMT

மும்பை, 

20 ஏக்கர் விவசாய நிலத்தில் பருத்தி மற்றும் துவரம் பருப்பு செடிகளுக்கு இடையே கஞ்சா செடிகள் வளர்த்த 4 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா வளர்ப்பு

யவத்மால் மாவட்டம் மகாகாவ் தாலுகாவில் உள்ள விவசாய நிலங்களில் கஞ்சா பயிரிடப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்குள்ள கோன்சாரா மற்றும் பர்க்வாடி கிராமங்களில் சந்தேகத்துக்குரிய 6 விவசாய நிலங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் பருத்தி மற்றும் துவரம் பருப்பு பயிர்களுக்கு இடையே கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அந்த நிலங்களில் வளர்க்கப்பட்டு இருந்த 1 டன்னுக்கும் அதிகமான கஞ்சா செடிகளை மீட்டு அழித்தனர். இதன் மதிப்பு ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது.

4 விவசாயிகள் கைது

போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கஞ்சா செடி வளர்த்த 4 விவசாயிகளை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சுவாபிமானி சேத்காரி சங்கதானா என்ற விவசாய அமைப்பின் யவத்மால் மாவட்ட தலைவர் மனீஷ் ஜாதவ் கூறியதாவது:-

வெள்ளம், வறட்சி, பயிர் இழப்பு, விவசாய பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காதது மற்றும் தொடர் நஷ்டத்தால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கடந்த 9 மாதங்களில் யவத்மால் மாவட்டத்தில் 200 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு உள்ளனர்.

மத்திய அரசு விவசாய விரோத கொள்கைகளை செயல்படுத்துகிறது. விவசாயிகள் துயரத்தை அரசால் சரி செய்ய முடியவில்லை. எனவே தான் இதுபோன்ற சட்டவிரோத பாதைகளுக்கு விவாயிகள் தள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால் கஞ்சா பயிரிட அரசு அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே மனீஷ் ஜாதவ் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்