தொடரும் கோர விபத்துகள்; சம்ருத்தி விரைவுசாலையில் உயிரிழப்புகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் - எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
சம்ருத்தி விரைவுசாலையில் தொடரும் கோர விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
மும்பை,
சம்ருத்தி விரைவுசாலையில் தொடரும் கோர விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
தொடர் விபத்துகள்
நாக்பூர்- மும்பை சம்ருத்தி விரைவு சாலை துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் கனவு திட்டமாகும். 520 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த சாலை திட்டத்தில், முதல் கட்ட சாலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த சாலைக்கு 'இந்து ஹிருதய்சாம்ராட் பாலாசாகேப் தாக்கரே மராட்டிய சம்ருத்தி மகாமார்க்' என்று பெயரிடப்பட்டது. இந்த நிலையில் இந்த விரைவு சாலையில் புல்தானா அருகே நேற்று நடந்த கோர விபத்தில் தனியார் சொகுசு பஸ் கவிழ்ந்து தீப்பிடித்தது. இதில் 25 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சாலை திறந்து வைக்கப்பட்ட நாள் முதல் அங்கு அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்புகளும் நடந்து வருகின்றன. எனவே சம்ருத்தி சாலையில் விபத்துகளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-
அவசர நடவடிக்கை
புல்தானாவில் நடந்த அசம்பாவித சம்பவத்தை தொடர்ந்து சம்ருத்தி நெடுஞ்சாலையில் செல்லும் தனியார் வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மாநில அரசு இதை தீவிரமாக கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு முன்பு தான் சம்பந்தப்பட்ட துறை வெளியிட்ட விபத்து புள்ளிவிவரங்களை கேட்டு கவலை அடைந்தேன். விபத்துகளை தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தேன். விபத்தில் இறந்தவர்களுக்கு எனது உணர்ப்பூர்வமாக அஞ்சலியை செலுத்திக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
300-க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு
இதேபோல சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அஜித்பவார் கூறுகையில், " இந்த கோர விபத்தின் காரணமாக சம்ருத்தி நெடுஞ்சாலையில் வாகனங்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. பஸ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். சம்ருத்தி நெடுஞ்சாலையில் பயணம் தொடங்கிய நாள் முதலே தொடர் விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த விபத்தில் ஏராளமான பொதுமக்கள் இறந்துள்ளனர். சம்ருத்தி நெடுஞ்சாலையில் தவறான கட்டுமானம் மற்றும் தனி மனித தவறுகளை இந்த விபத்துகள் மீண்டும், மீண்டும் நிரூபிக்கின்றன. நிருபர்களின் ஆலோசனையுடன் மாநில அரசு இதற்கு உடனடி தீர்வை காண முயற்சிக்க வேண்டும்" என்றார். முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறுகையில், " புல்தானா பஸ் விபத்து துரதிருஷ்டவசமானது மற்றும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சம்ருத்தி விரைவு சாலையில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். ஆனால் இந்த விபத்துக்களை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புல்தானா விபத்து அரசின் கண்களை திறக்கும் என நம்புகிறேன்" என்றார்.