அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பா.ஜனதா முயற்சி - காங்கிரஸ் குற்றச்சாட்டு

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு பிரச்சினைகளில் இருந்து திசைத்திருப்பும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.;

Update:2022-08-29 21:33 IST

மும்பை,

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு பிரச்சினைகளில் இருந்து திசைத்திருப்பும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

அதிகரிக்கும் பணவீக்கம்

நாட்டில் கடுமையாக உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் விலை மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் தொடர்பாக ஆளும் பா.ஜனதா அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார். இது குறித்து அவர் பேசியதாவது:-

விலைவாசி உயர்வு

நாட்டில் அதிகரித்துவரும் விலைவாசி உயர்வுக்கு எதிராக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் வருகிற 4-ந் தேதி காங்கிரஸ் கட்சி பேரணியை நடத்தும்.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 106 டாலராக இருந்தது. இருப்பினும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71 ஆகவும், டீசல் விலை ரூ.55 ஆகவும் இருந்தது.

2014-ம் ஆண்டு முதல் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து எரிபொருளுக்கான கலால் வரியை அதிகரித்து வருகிறது.

ஆனால் ஒவ்வொரு வாரமும் மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப ஒரு சர்ச்சையை பா.ஜனதா கையில் எடுக்கிறது. அவர்கள் மதம், மொழி, மக்கள் அணியும் உடையின் பெயரில் சமூகத்தை பிளவுபடுத்துகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பிரச்சினை ஏற்படுத்தப்படுகிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையாக இருந்தாலும் சரி, சரக்கு சேவை வரி(ஜி.எஸ்.டி) அமலுக்கு கொண்டுவருவதாக இருந்தாலும் சரி அனைத்தும் எந்த திட்டமிடுதலும் இல்லாமல் அவசர, அவசரமாக செய்து முடிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்