எம்.எல்.சி. தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களிக்க வாய்ப்பில்லை- உத்தவ் தாக்கரே பேச்சு
எம்.எல்.சி. தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களிக்க வாய்ப்பில்லை என உத்தவ் தாக்கரே கூறினார்.
மும்பை,
எம்.எல்.சி. தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களிக்க வாய்ப்பில்லை என உத்தவ் தாக்கரே கூறினார்.
இன்றைய ஜனநாயகம்
மராட்டிய மேல்-சபைக்கு 10 எம்.எல்.சி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பவாய் பகுதியில் உள்ள வெஸ்ட் இன் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் சிவசேனாவின் 56-வது ஆண்டு விழாவையொட்டி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கட்சி எம்.எல்.ஏ.க்கள், தலைவர்கள் இடையே பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நாளை நடைபெற உள்ள எம்.எல்.சி. தேர்தலுக்கு நாம் நமது எம்.எல்.ஏ.க்களை ஒன்றாக வைத்து உள்ளோம். இன்றைய நிலையில் இதுதான் ஜனநாயகம் என அழைக்கப்படுகிறது.
வருங்காலத்தில் மேலும் பல எம்.எல்.ஏ.க்களை பெற கட்சி கடுமையாக உழைத்து வருகிறது. நடைபெற உள்ள எம்.எல்.சி. தேர்தலை பற்றி நான் கவலைப்படவில்லை. மாநிலங்களவை தேர்தலில் சிவசேனா வீழ்த்தப்பட்டது துரதிருஷ்டவசமானது. அந்த தேர்தலில் சிவசேனா வாக்குகள் பிரியவில்லை. எங்களின் திட்டம் அந்த தேர்தலில் தவறாக சென்றுவிட்டது.
துரோகிகள் இல்லை
எம்.எல்.சி. தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களிப்பார்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. சிவசேனாவிடம் துரோகிகள் இல்லை. எம்.எல்.சி. தேர்தல் மூலம் எங்கள் (மகாவிகாஸ் கூட்டணி) இடையே பிளவு இல்லை என்பது தெரியவரும்.
இதேபோல தேர்தலில் சிவசேனா வேட்பாளர்கள் 2 பேரும் வெற்றி பெறுவார்கள். நான் தான் திவாகர் ராவ்தே, சுபாஷ் தேசாயை மீண்டும் எம்.எல்.சி.களாக ஆக்கவில்லை. அதே நேரத்தில் அவர்களை ஓய்வு பெறவும் நான் அனுமதிக்க மாட்டேன். அவர்கள் கட்சியை பலப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.