சிவசேனா மந்திரிகள் மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும்; முதல்-மந்திரி ஷிண்டே உத்தரவு

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது கட்சியை சேர்ந்த அனைத்து மந்திரிகளும் கட்சி தலைமை அலுவலகத்தில் மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2023-10-21 18:45 GMT

மும்பை, 

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது கட்சியை சேர்ந்த அனைத்து மந்திரிகளும் கட்சி தலைமை அலுவலகத்தில் மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.

ஜனதா தர்பார்

சிவசேனா கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே தனது கட்சி மந்திரிகள் அனைவரும் மும்பையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

தெற்கு மும்பையில் உள்ள சிவசேனா பாலாசாகேப் பவனில் (கட்சி தலைமை அலுவலகம்) வாரத்தில் 5 நாட்கள் "ஜனதா தர்பார்" நிகழ்ச்சியை நடத்தவேண்டும். இங்கு வரும் மக்களின் குறைகளை கேட்டு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். கிராமம் அல்லது தாலுகா அளவிலான பிரச்சினைகள், அமைச்சம் தொடர்பான வேலை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்பட வேண்டும். அரசை தலைமை தாங்கும் கட்சியான சிவசேனாவின் தொண்டர்கள், சாதாரண குடிமக்களும் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பால்தாக்கரே வழியில்...

இது குறித்து மந்திரி அப்துல் சத்தார் கூறியதாவது:-

80 சதவீத சோசலிசம் மற்றும் 20 சதவீத அரசியல் என்பது சிவசேனா நிறுவனர் மறைந்த பால் தாக்கரேவின் கொள்கையாகும். இந்த முறையை பின்பற்றி அதே வழியில் செயல்படுமாறு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவு பிறப்பித்துள்ளார். அதற்கான பணிகளை நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம். இதன்படி 9 சிவசேனா மந்திரிகளில் தாதா புசே மற்றும் உதய் சமந்த் திங்கட்கிழமை ஜனதா தர்பார் நடத்துகிறார்கள், இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை ஷம்புராஜ் தேசாய் மற்றும் சந்தீபன் பும்ரே ஆகியோரும், புதன்கிழமை தீபக் கேசர்கர் மற்றும் தானாஜி சாவந்த் ஆகியோரும், வியாழக்கிழமை அப்துல் சத்தார் மற்றும் குலாப்ராவ் பாட்டீல் ஆகியோரும் மற்றும் வெள்ளிக்கிழமை சஞ்சய் ரத்தோடும் ஜனதா தர்பாரை நடத்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்