28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சோட்டா ராஜன் கூட்டாளி சூரத்தில் கைது

28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சோட்டா ராஜன் கும்பலை சேர்ந்தவரை போலீசார் சூரத்தில் கைது செய்தனர்.

Update: 2023-10-07 19:00 GMT

மும்பை, 

28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சோட்டா ராஜன் கும்பலை சேர்ந்தவரை போலீசார் சூரத்தில் கைது செய்தனர்.

கொள்ளை வழக்கு

மும்பை அண்டாப்ஹில் பகுதியை சேர்ந்தவர் சபீர் லகானி (வயது59). நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கும்பலை சேர்ந்தவர். சபீர் லகானியும் அவரது 4 கூட்டாளிகளும் கடந்த 1994-ம் ஆண்டு செம்பூர் சிந்தி கேம்ப் பகுதியில் ரியல் எஸ்டேட் தரகர் ஒருவரின் வீட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்து, அங்கு கொள்ளையடிக்க முயன்றனர். இந்த கொள்ளை முயற்சியின்போது அங்கு போலீஸ்காரர் ஒருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

28 ஆண்டுகளுக்கு பிறகு கைது

இந்த சம்பவம் குறித்து போலீசார் கொலை முயற்சி, கொள்ளை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த கோர்ட்டு கொள்ளை முயற்சி சம்பவத்தில் தொடர்புடைய 5 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த நிலையில் 1995-ம் ஆண்டு இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சபீர் லகானி தலைமறைவானார். 28 ஆண்டுகளுக்கு பிறகு அவர், குஜராத் மாநிலம் சூரத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சபீர் லகானியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்