மாநில பா.ஜனதா தலைவராக சந்திரசேகர் பவன்குலே நியமனம்
மராட்டிய மாநில பா.ஜனதா தலைவராக சந்திரசேகர் பவன்குலேவும், மும்பை தலைவராக ஆஷிஸ் செலாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை,
மராட்டிய மாநில பா.ஜனதா தலைவராக சந்திரசேகர் பவன்குலேவும், மும்பை தலைவராக ஆஷிஸ் செலாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய தலைவர் நியமனம்
மராட்டியத்தில் ஏக்நாத் ஷிண்டே அரசு கடந்த ஜூன் மாதம் பதவி ஏற்றது. இதில் மந்திரி சபை விரிவாக்கம் கடந்த செவ்வாய்கிழமை நடந்தது. பா.ஜனதா சார்பில் 9 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். இதில் பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மும்பை தலைவர் மங்கல் பிரதாப் லோதா ஆகியோரும் மந்திரியாக பதவி ஏற்றனர். எனவே அவர்கள் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து மராட்டிய மாநில பா.ஜனதா தலைவராக முன்னாள் மந்திரி சந்திரசேகர் பவன்குலே நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல மும்பை பா.ஜனதா தலைவராக ஆஷிஸ் செலார் அறிவிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனம் தொடர்பான அறிவிப்பை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டார்.
கடந்த தேர்தலில் சீட் மறுப்பு
2024 நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சந்திரசேகர் பவன்குலேயை பா.ஜனதா மாநில தலைவராக அறிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. இவர் 1995-ம் ஆண்டு கோபிநாத் முண்டே, நிதின் கட்கரி தலைமையில் பா.ஜனதாவில் இணைந்தார். கட்சியின் மாநில இளைஞர் அணி துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 1997, 2002-ல் மாவட்ட நகராட்சி உறுப்பினராகவும், 2004-ல் முதல் முறையாக எம்.எல்.ஏ.வாகவும் தேர்வு செய்யப்பட்டார். 2014-19-ல் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் மின்சாரதுறை மந்திரியாக இருந்தார். கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட சந்திரசேகர் பவன் குலேவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை மாநகராட்சி தேர்தல்
இதேபோல மும்பை மாநகராட்சி தேர்தல் அறிவிப்பு விரைவில் வர உள்ளது. இந்தநிலையில் ஆஷிஸ் செலார் மும்பை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா மும்பையில் 80 இடங்களை கைப்பற்றி அதிர்ச்சி அளித்தது. எனவே இந்த முறை ஆஷிஸ்செலார் தலைமையின் கீழ் அந்த கட்சி மாநகராட்சியை சிவசேனாவிடம் இருந்து கைப்பற்ற தீவிரம் காட்டும் என கூறப்படுகிறது.
ஆஷிஸ் செலார் கடந்த 2014-19 பட்னாவிஸ் ஆட்சியில் மந்திரியாக இருந்தவர் ஆவார்.