இறைச்சி விளம்பரத்துக்கு தடை கோரிய வழக்கு 'நீங்கள் ஏன் மற்றவர்களின் உரிமைகளில் தலையிடுகிறீர்கள்?'- ஜெயின் அமைப்புக்கு ஐகோர்ட்டு கேள்வி

இறைச்சி விளம்பரத்திற்கு தடை கோரிய வழக்கில் நீங்கள் ஏன் மற்றவர்களின் உரிமைகளில் தலையிடுகிறீர்கள் என ஜெயின் அமைப்புக்கு மும்பை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2022-09-27 02:45 GMT

மும்பை,

இறைச்சி விளம்பரத்திற்கு தடை கோரிய வழக்கில் நீங்கள் ஏன் மற்றவர்களின் உரிமைகளில் தலையிடுகிறீர்கள் என ஜெயின் அமைப்புக்கு மும்பை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

மனு தாக்கல்

அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் இறைச்சி மற்றும் இறைச்சி உணவுகள் தொடர்பான விளம்பரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜெயின் அமைப்பு ஒன்று மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

மனுவில் கூறியிருப்பதாவது:-

தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் அசைவ உணவு விளம்பரங்கள், சைவ உணவு உண்பவர்களுக்கு இடையூறு விளைவிப்பதோடு, அவர்களின் அடிப்படை உரிமையும் மீறுவதாக உள்ளது.

மது மற்றும் சிகரெட் விளம்பரங்களுக்கு அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது. மது மற்றும் சிகரெட் போன்று அசைவ உணவும் ஆரோக்கியமற்றது மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடியது.

குழந்தைகள் மனதை கெடுக்கும்

குழந்தைகள் உள்பட தங்கள் குடும்பத்தினர் இதுபோன்ற விளம்பரங்களை பார்க்க நேரிடுகிறது. இது நாங்கள் நிம்மதியான வாழ்வதற்கான உரிமையை மீறுவதாகவும், எங்கள் குழந்தைகளின் மனதை கெடுப்பதாகவும் உள்ளது.

அத்தகைய உணவுகளை விற்பனை செய்வதையோ அல்லது உட்கொள்வதையோ நாங்கள் எதிர்க்கவில்லை. இத்தகைய பொருட்களுக்கு விளம்பரங்களை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

நீதிபதிகள் கேள்வி

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் மாதவ் ஜம்தார் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அவர்களின் வாதத்தை கேட்ட நீதிபதிகள், அரசியலமைப்பு சட்டத்தின் 19-வது பிரிவை மீறுவதை பற்றிய உங்கள் எண்ணம் என்ன? நீங்கள்(மனுதாரர்கள்) ஏன் மற்றவர்கள் உரிமைகளில் தலையிட முயற்சிக்கிறீர்கள்? நமது அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை படித்தீர்களா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

மேலும் நமது அரசியலமைப்பு முகப்புரை சில உறுதிமொழிகளை அளித்துள்ளது.

நீங்கள் ஒன்றை தடை செய்ய ஒரு விதி, சட்டம் அல்லது வழிகாட்டுதல்களை உருவாக்க மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு ஐகோர்ட்டில் கேட்கிறீர்கள். இது ஒரு சட்டமியற்றும் நடவடிக்கை, இதற்கு நீங்கள் சட்டமன்றத்திற்கு தான் செல்ல வேண்டும். எங்களிடம் அல்ல " என தெரிவித்தனர்.

மேலும் மனுவை வாபஸ் பெற்று திருத்தங்களுடன் புதிய மனுவை தாக்கல் செய்யுமாறு மனுதாரர்களுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்