வாயில் புகையிலையை திணித்து பெண் குழந்தையை கொன்ற கொடூர தந்தை கைது

ஜல்காவில் 3-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அதன் வாயில் புகையிலையை திணித்து கொன்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-13 18:45 GMT

மும்பை, 

ஜல்காவில் 3-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அதன் வாயில் புகையிலையை திணித்து கொன்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.

பெண் குழந்தை பிறந்தது

ஜல்காவ் ஜாம்னேர் தாலுகாவை சேர்ந்தவர் கோகுல் ஜாதவ்(வயது30). இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்தன. 3-வதாக ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட நிலையில் அவரது மனைவி கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான மனைவியை பிரசவத்திற்காக வகோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தார். கடந்த 2-ந் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. 3-வதும் பெண் குழந்தை பிறந்ததால் கோகுல் ஜாதவ் மனமுடைந்ததாக தெரிகிறது. மேலும் பிறந்த பெண் குழந்தை மீது அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது. கடந்த 10-ந்தேதி பச்சிளம் குழந்தையின் வாயில் புகையிலையை திணித்து வைத்தார். இதனால் குழந்தை உடல் நலம் பாதித்து அன்றைய தினம் இரவே உயிரிழந்தது. பின்னர் குழந்தையின் உடலை மறைக்க பர்தாபூர் வாகோட் சாலையில் குழிதோண்டி புதைத்து உள்ளார். இந்தநிலையில் பிறந்த குழந்தையை பதிவு செய்யும் பணிக்காக ஆரம்ப சுகாதார மைய ஊழியர் அவரது வீட்டிற்கு சென்றார்.

போலீசில் சிக்கினார்

அங்கு குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த ஊழியர் டாக்டருக்கு தகவல் தெரிவித்தார். இதன்படி டாக்டர் அவரது வீட்டிற்கு வந்து கோகுல் ஜாதவிடம் விசாரித்தார். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் டாக்டர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கோகுல் ஜாதவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் குட்டு அம்பலமானது. போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கோகுல் ஜாதவை கைது செய்தனர். மேலும் பிரேத பரிசோதனைக்காக அக்குழந்தையின் உடலை தோண்டி எடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே இதற்கு உடந்தையாக இருந்த அவர்களது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். 3-வதும் பெண் குழந்தை பிறந்த காரணத்திற்காக அந்த குழந்தையை தந்தையே கொன்ற கொடூர சம்பவம் அப்பகுதியில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்