மந்திராலயாவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

மந்திராலயாவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் அகமது நகரில் வைத்து கைது செய்தனர். இதே போல மந்திராலயாவிற்குள் கத்தியுடன் நுழைய முயன்ற மற்றொருவர் போலீசாரிடம் பிடிபட்டார்.

Update: 2023-08-31 18:45 GMT

மும்பை, 

மந்திராலயாவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் அகமது நகரில் வைத்து கைது செய்தனர். இதே போல மந்திராலயாவிற்குள் கத்தியுடன் நுழைய முயன்ற மற்றொருவர் போலீசாரிடம் பிடிபட்டார்.

வெடிகுண்டு மிரட்டல்

நவிமும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் அழைப்பு ஒன்று வந்தது. இதில் பேசிய மர்மநபர் மந்திராலயா வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறி விட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.

இந்த அழைப்பை தீவிரமாக எடுத்துக்கொண்ட போலீசார் உடனடி நடவடிக்கையில் இறங்கினர். வெடிகுண்டு மீட்பு படை பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் மந்திராலயா வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் மந்திராலயா வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

இதன்மூலம் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அகமதுநகரில் இருந்து மிரட்டல் வந்தது தெரியவந்தது. இதையடுத்து உள்ளூர் போலீசாரின் உதவியுடன் விசாரணை நடத்தி மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடித்து கைது செய்தனர்.

கத்தியுடன் நுழைய முயன்றவர்

விசாரணையில் அவர் குடிபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. கடந்த 15 நாட்களில் மந்திராலயாவிற்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது 2-வது முறையாகும்.

இதேபோல மந்திராலயா வளாகத்திற்குள் செல்லும் நபர்களிடம் நேற்று வழக்கமான சோதனை நடைபெற்றது. அப்போது நபர் ஒருவர் தனது உடைமைகளில் கத்தியை மறைத்து உள்ளே கொண்டுசெல்ல முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் உஸ்மானாபாத் மாவட்டம் உமர்கா தாலுகாவை சேர்ந்தவர் என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்த போலீசார் அதனை எதற்காக கொண்டு வந்தார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்