பா.ஜ.க. ஆட்சிக்கு எதிரான 'கவுண்ட்டவுன்' தொடங்கி விட்டது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

பா.ஜ.க. ஆட்சிக்கு எதிரான ‘கவுண்ட்டவுன்' தொடங்கி விட்டது என்று மும்பையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

Update: 2023-09-01 20:00 GMT

மும்பை,  

பா.ஜ.க. ஆட்சிக்கு எதிரான 'கவுண்ட்டவுன்' தொடங்கி விட்டது என்று மும்பையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

பிரதமருக்கு நன்றி

மும்பையில் 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நேற்று முடிவடைந்த பின்னர், தலைவர்கள் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழிலேயே பேசினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பாட்னாவில் கூடும் போது 19 கட்சிகள், பெங்களூருவில் கூடும் போது 26 கட்சிகள், மும்பையில் கூடிய இன்று (நேற்று) 28 கட்சிகள் என இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலிமை அடைந்து வருகிறது. எங்கே சென்றாலும், எங்கே பேசினாலும் தன்னுடைய ஆட்சியின் சாதனைகளைச் சொல்லாமல் எங்களைப் பற்றியே பேசி எங்கள் கூட்டணிக்கு சிறந்த மக்கள் தொடர்பு அதிகாரியாக பிரதமர் செயல்பட்டு வருகிறார். இந்தியா கூட்டணியை 'பாப்புலர்' ஆக்கியதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சி.ஏ.ஜி. அறிக்கையை சுட்டிக் காட்டியுள்ள ரூ.7.5 லட்சம் கோடி மதிப்பிலான முறைகேடுகள் பற்றிப் பேசாமல் பிரதமர் நரேந்திர மோடி அமைதி காக்கிறார். மோடி ஆட்சி நாளுக்குநாள் 'அன் பாப்புலர்' ஆகி வருகிறது. இந்தியா கூட்டணி ஒவ்வொரு நாளும் 'பாப்புலர்' ஆகி வருகிறது. இது ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான கூட்டணி மட்டும் அல்ல. இந்திய நாட்டையும் 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றுவதற்கான கூட்டணி.

'கவுண்ட்டவுன்' ஆரம்பம்

இன்றைய கூட்டம், திருப்திகரமாக மட்டுமல்ல, திருப்புமுனையாகவும் அமைந்திருக்கிறது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவும், எங்கள் மீதான எதிர்பார்ப்பும் நாட்டு மக்களிடையே நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பொய்களையும் அவதூறுகளையும் வெறுப்பையும் முதலீடாக வைத்து பா.ஜ.க நடத்திவரும் பாசிச ஆட்சியின் 'கவுண்ட்டவுன்' ஆரம்பமாகி உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்த அரசாக மோடி தலைமையிலான அரசு வரலாற்றில் பதியப்படும். அதற்கு மராட்டியமே சிறந்த சாட்சி. இந்தியாவில் தற்போது அரசியல் சர்வாதிகாரம் நடந்து கொண்டிருக்கிறது. நரேந்திரமோடி என்கிற தனி நபரிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை பறிப்பது எங்கள் நோக்கம் அல்ல, யார் மீதும் தனிப்பட்ட வெறுப்போ வன்மமோ எங்களுக்கு இல்லை. மீண்டும் பா.ஜ.க.விடம் ஆட்சியைக் கொடுத்தால் நாம் பார்த்த இந்தியாவே இனி இருக்காது. அதனால் எதிர்க்கிறோம். இந்தியாவை பாதுகாக்கிற மகத்தான அரசியல் களத்தில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள எதிர்க்கட்சிகள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உள்ளன. இந்திய மக்கள் ஒவ்வொருவரும், இந்தியாவைக் காக்கிற போரில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்