மாநகராட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ராஜ் தாக்கரேவுடன் பா.ஜனதா தலைவர் சந்திப்பு

மும்பை மாநகராட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயை மாநில பா.ஜனதா தலைவர் சந்தித்தார்.

Update: 2022-08-30 14:54 GMT

மும்பை,

மும்பை மாநகராட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயை மாநில பா.ஜனதா தலைவர் சந்தித்தார்.

கூட்டணியில் சேர்க்க தீவிரம்

மும்பை மாநகராட்சி தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறலாம் என கூறப்படுகிறது. கடந்த மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா கட்சி 82 இடங்களில் வெற்றி பெற்று அனைத்து கட்சிகளுக்கும் அதிர்ச்சி கொடுத்தது. பா.ஜனதா, சிவசேனாவை விட சில இடங்கள் மட்டுமே குறைவாக பெற்று இருந்தது. எனினும் மாநகராட்சியை சிவசேனாவிடம் இருந்து கைப்பற்ற அவர்கள் முயற்சி செய்யவில்லை.

இந்தநிலையில் வர இருக்கும் தேர்தலில் மும்பை மாநகராட்சியை பிடிக்க பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே சிவசேனா 2 ஆக உடைந்து ஏக்நாத் ஷிண்டே அணி பா.ஜனதாவுடன் உள்ளது.

இந்தநிலையில் ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனாவையும் கூட்டணிக்குள் இழுக்க பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. இதன் மூலம் மராத்தியர்களின் வாக்குகளை முழுமையாக தங்கள் பக்கம் இழுத்துவிடலாம் என பா.ஜனதா நினைக்கிறது.

பா.ஜனதா தலைவர்கள் சந்திப்பு

சமீபத்தில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ராஜ் தாக்கரேயை சந்தித்தார். இந்தநிலையில் நேற்று பா.ஜனதா மாநிலத்தலைவர் சந்திரசேகர் பவன்குலே தாதரில் உள்ள ராஜ் தாக்கரேவின் வீட்டில் அவரை சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் சந்திரசேகர் பவன்குலே எதுவும் கூறவில்லை. எனினும் சமூகவலைதளத்தில் அரசியல், பல்வேறு சமூக பிரச்சினைகள் குறித்து ராஜ் தாக்கரேவுடன் ஆலோசித்ததாக அவர் பதிவிட்டு இருந்தார்.

முன்னதாக நேற்று முன்தினம் பா.ஜனதா முன்னாள் மந்திரி வினோத் தாவ்டே ராஜ் தாக்கரேயை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை மாநகராட்சி தேர்தல் நெருங்கும் நிலையில் பா.ஜனதா தலைவர்கள் ராஜ் தாக்கரேயை சந்தித்து பேசி வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்