பிஜாப்பூர் மன்னரின் படைதளபதி அப்சல் கான் கல்லறை ஆக்கிரமிப்பு இடித்து அகற்றம்

சத்ரபதி சிவாஜியால் கொல்லப்பட்ட அப்சல்கானின் கல்லறை ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை இடித்து அகற்றப்பட்டதற்கு துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.;

Update:2022-11-11 00:15 IST

மும்பை, 

சத்ரபதி சிவாஜியால் கொல்லப்பட்ட அப்சல்கானின் கல்லறை ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை இடித்து அகற்றப்பட்டதற்கு துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

படை தளபதி

ஷாஹி வம்சத்தை சேர்ந்த பிஜாப்பூர் மன்னர் இரண்டாம் அலி அடில் ஷாஹியின் படைத்தளபதி அப்சல்கான். விஜயநகர பேரரசை வெற்றி கொள்ள முக்கிய காரணமாக இருந்த இவர் 1659-ம் ஆண்டு மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியால் கொல்லப்பட்டார்.

மராட்டிய மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் உள்ள பிரதாப்காட் கோட்டை படிகளில் வைத்து அப்சல் கானை சத்ரபதி சிவாஜி கொன்றார். பின்னர் அவரது உடல் கோட்டையில் புதைக்கப்பட்டது.

கல்லறை ஆக்கிரமிப்பு அகற்றம்

இந்தநிலையில் நேற்று சத்தாரா மாவட்ட நிர்வாகம் அப்சல்கான் கல்லறை சுற்றியிருந்த ஆக்கிரமிப்பை இடித்து அகற்றியது. அப்சல்கான் கொல்லப்பட்ட நாளான நேற்று அதிகாரிகள் அவரது கல்லறை ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை இடித்து அகற்றி உள்ளனர். நேற்று அதிகாலை ஆக்கிரமிப்பு இடிக்கும் பணி நடந்தது.

அப்போது முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது குறித்து மாவட்ட கலெக்டர் ருஜேஷ் ஜெய்வான்ஷி கூறுகையில், "40 முதல் 50 சென்ட் நிலம் வரை ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இதில் ஒரு பகுதி நிலம் வனத்துறைக்கு சொந்தமானது. ஒரு பகுதி நிலம் வருவாய் துறைக்கு சொந்தமானது" என்றார்.

பட்னாவிஸ் மகிழ்ச்சி

அப்சல்கான் கல்லறை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதுக்கு துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "இன்று சிவ்பிரதாப் தினம் என்பதால் பெருமைக்குரிய நாளாகும். இந்த நாளில் தான் அப்சல்கான், சத்ரபதி சிவாஜியால் கொல்லப்பட்டார். 2007-ல் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. 2017-ல் அதற்கான பணிகளை நாங்கள் தொடங்கினோம். அப்போது சில சட்ட சிக்கல்கள் எழுந்தன. ஆக்கிரமிப்புகளை அகற்ற சத்ரபதி சிவாஜி மன்னரை பின்பற்றும் மக்கள் வலியுறுத்தி வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. தற்போது ஒட்டுமொத்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் எல்லோரும் திருப்தி அடைந்து உள்ளனர்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்