கோரேகாவில் ஆட்டோ மீது பெஸ்ட் பஸ் மோதி 2 பெண்கள் பலி
கோரேகாவில் பெஸ்ட் பஸ் ஆட்டோ மீது மோதிய விபத்தில் 2 பெண் பயணிகள் பலியாகினர்.;
மும்பை,
கோரேகாவில் பெஸ்ட் பஸ் ஆட்டோ மீது மோதிய விபத்தில் 2 பெண் பயணிகள் பலியாகினர்.
அவரச பிரேக்
மும்பை காந்திவிலி பொய்சர் பணிமனையில் இருந்து காட்கோபர் பணிமனைக்கு நேற்று அதிகாலை 1.45 மணி அளவில் பெஸ்ட் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சை டிரைவர் சந்தோஷ் தேவ்லேகர்(வயது53) என்பவர் ஓட்டிச்சென்றார். பஸ் கோரேகாவ் மேம்பாலத்தில் சென்றபோது, முன்னால் சென்ற மற்றொரு பஸ்சை டிரைவர் திடீரென பிரேக் போட்டு நிறுத்தி உள்ளார். இதனால் பின்னால் வந்த பெஸ்ட் பஸ்சை டிரைவர் அவசர பிரேக் போட்டு நிறுத்த முயன்றுள்ளார்.
2 பெண்கள் பலி
ஆனால் மழை காரணமாக பஸ்சின் டயர் சாலையில் வழுக்கி அந்த வழியாக சென்றுகொண்டிருந்த ஆட்டோ மற்றும் முன்னால் சென்ற பஸ் மீது பெஸ்ட் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ நொறுங்கியதால் அதில் பயணம் செய்த 2 பெண்கள் படுகாயமடைந்தனர். ஆட்டோ டிரைவர் லேசான காயம் அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று காயமடைந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பெண் பயணிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். டிரைவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில், பலியான பெண்கள் பெயர் ஜானி சங்கராம் மற்றும் சுஜாதா பஞ்சாகி என தெரியவந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.