விதர்பாவில் கர்பா அரங்குகளில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும்- விசுவ இந்து பரிஷத் கோரிக்கை

விதர்பாவில் கர்பா நடன அரங்குகளில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று விசுவ இந்து பரிஷத் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

Update: 2022-09-26 22:45 GMT

நாக்பூர், 

விதர்பாவில் கர்பா நடன அரங்குகளில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று விசுவ இந்து பரிஷத் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

நவராத்திரி பண்டிகை

மராட்டியத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் விழாக்களில் நவராத்திரி பண்டிகையும் ஒன்றாகும்.

இந்த 9 நாள் பண்டிகையின்போது மண்டல்கள் சார்பில் கர்பா மற்றும் தாண்டியா நடன நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

நவராத்திரி பண்டிகை நேற்று தொடங்கிய நிலையில் விசுவ இந்து பரிஷத் அமைப்பு விதர்பாவில் கர்பா மற்றும் தாண்டியா நிகழ்ச்சிகளில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்க கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக மராட்டிய அரசுக்கும், நாக்பூர் போலீஸ் கமிஷனருக்கும் இந்த அமைப்பு சார்பில் கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

இதுகுறித்து விசுவ இந்து பரிஷத் அமைப்பு விதர்பா பகுதி செயலாளர் கோவிந்த் ஷெண்டே வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-

லவ் ஜிகாத்

விதர்பாவில் பல்வேறு அமைப்புகள் மற்றும் மண்டல்களால் பல இடங்களில் கர்பா மற்றும் தாண்டியா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் அதிக அளவில் பங்கேற்கின்றனர்.

கர்பா மற்றும் தாண்டியா ஆகியவை பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டும் இல்லை. இவை வழிபாட்டு முறைகள் ஆகும். எனவே இந்த இடங்களில் மற்ற மதங்களை சேர்ந்தவர்கள் நுழைய அனுமதிக்க கூடாது.

இதுமட்டும் இன்றி தற்போது "லவ் ஜிகாத்" சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கர்பா மற்றும் தாண்டியா நிகழ்ச்சிகளிலும் இதுபோன்ற நிகழ்வுகள் காணப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சிகளின்போது சமூக விரோதிகள் நடமாடுவதால், உள்ளே நுழைவதற்கு முன்பு ஆதார் அட்டைகளை சரிபார்க்க வேண்டும். மேலும் அப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மண்டல்கள் மற்றும் கர்பா நிகழ்ச்சி அமைப்பாளர்களையும் விசுவ இந்து பரிஷத் அமைப்பு அணுகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்