மனைவியின் வளர்ப்பு தம்பியை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டிய ஆட்டோ டிரைவர்- செம்பூரில் பரபரப்பு சம்பவம்
நடத்தையில் சந்தேகப்பட்டு ஆட்டோ டிரைவர், மனைவியின் வளர்ப்பு தம்பியையே கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டிய சம்பவம் செம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,
நடத்தையில் சந்தேகப்பட்டு ஆட்டோ டிரைவர், மனைவியின் வளர்ப்பு தம்பியையே கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டிய சம்பவம் செம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுவன் மாயம்
மும்பை செம்பூர், வாஷிநாக்கா பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சபிக் சேக்(வயது 33). இவரது மனைவி சனா. இவரின் பெற்றோர், வளர்ப்பு தம்பி ஈஸ்வர்(17) ஆகியோர் வாஷி நாக்கா பகுதியில் தான் வசித்து வந்தனர். கடந்த திங்கட்கிழமை சனா பெற்றோர் வீட்டில் இருந்தார். அங்கு சென்ற சபிக் சேக் மனைவியின் வளர்ப்பு தம்பி ஈஸ்வரை மட்டும் தனியாக அவரது வீட்டுக்கு அழைத்து சென்றார். அதன்பிறகு ஈஸ்வரை காணவில்லை.
இந்த சம்பவத்துக்கு பிறகு சபிக் சேக், மனைவி சனாவை வீட்டுக்கு வரவிடவில்லை. பெற்றோர் வீட்டிலேயே இருக்குமாறு கூறினார்.
ஈஸ்வர் மாயமானது குறித்து ஆா்.பி.எப். போலீசில் சனாவின் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
நடத்தையில் சந்தேகப்பட்டு வெறிச்செயல்
புகார் தொடர்பாக போலீசார் ஈஸ்வரை கடைசியாக அழைத்து சென்ற சபிக் சேக்கை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மனைவியின் வளர்ப்பு தம்பி ஈஸ்வரை கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி வீட்டின் சமையல் அறையில் வைத்து இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வீட்டில் இருந்த உடல்பாகங்களை பறிமுதல் செய்தனர். சபிக் சேக்கை கைது செய்து விசாரித்தனர். அப்போது மனைவி சனாவுடன், ஈஸ்வர் தகாத உறவில் இருப்பதாக சந்தேகப்பட்டு அவரை கொலை செய்ததாக சபிக் சேக் கூறியுள்ளார்.
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது வளர்ப்பு தம்பியையே ஆட்டோ டிரைவர் கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.