ராணுவ கர்னலாக நடித்து இளைஞர்களிடம் பணமோசடி செய்த ஆட்டோ டிரைவர் கைது
ராணுவ கர்னலாக நடித்து பஞ்சாப் இளைஞர்களிடம் பணமோசடி செய்த ஆட்டோ டிரைவர் புனேயில் சிக்கினார்.
புனே,
ராணுவ கர்னலாக நடித்து பஞ்சாப் இளைஞர்களிடம் பணமோசடி செய்த ஆட்டோ டிரைவர் புனேயில் சிக்கினார்.
போலீசில் புகார்
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் பகுதியை சேர்ந்த இளைஞர்களிடம் ஒருவர் ராணுவத்தில் கர்னலாக இருப்பதாகவும், ராணுவத்தில் சேர்த்து விடுவதாக கூறி லட்சக்கணக்கில் பணமோசடி செய்ததாக போலீசாருக்கு புகார் வந்தது.
இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் புனே தெகுரோட்டில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் கடந்த 30 ஆண்டாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்த சஞ்சய் சாவந்த் என தெரியவந்தது.
ஆட்டோ டிரைவர் கைது
இதையடுத்து பதான்கோட் போலீசார் புனேவிற்கு வந்தனர். பின்னர் புனே குற்றப்பிரிவு, ராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து அவரை தேடி வந்தனர்.
இந்த விசாரணையில் கர்னலாக நடித்து ஏமாற்றி வந்த சஞ்சய் சாவந்த் ஆட்டோ டிரைவராக மாறி உலா வருவதாக தகவல் கிடைத்தது. தீவிர தேடலுக்கு பிறகு அவர் சிக்கினார்.
இதனை தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணைக்காக பதான்கோட் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.