மும்பையில் ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர்கிறது
மும்பையில் ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.;
மும்பை,
மும்பையில் ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மந்திரி பேச்சுவார்த்தை
மும்பையில் ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என டிரைவர் சங்கத்தினர் அரசை வலியுறுத்தி வந்தனர். மேலும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நாளை (திங்கட்கிழமை) முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் மிரட்டல் விடுத்து இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் டாக்சி, ஆட்டோ டிரைவர் சங்க பிரதிநிதிகளை தொழில்துறை மந்திரி உதய் சாமந்த் சந்தித்து பேசினார். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து டிரைவர் சங்கத்தினர் நாளை முதல் நடத்த இருந்த வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். கூட்டத்துக்கு பிறகு மந்திரி உதய் சாமந்த் ஆட்டோ, டாக்சி கட்டண உயர்வு குறித்த இறுதி முடிவை மும்பை பெருநகர போக்குவரத்து ஆணையம் எடுக்கும் என்றார்.
கட்டணம் உயருகிறது
கூட்டத்தின் போது டாக்சி, ஆட்டோ கட்டண உயர்வுக்கு மந்திரி உதய் சாமந்த் சம்மதித்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், " டிரைவர் சங்கத்தினருடன் போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அதிகளவில் கட்டணத்தை உயர்த்த முடியாது என்பதை அதிகாரிகள் அவர்களிடம் எடுத்து கூறினர். இதையடுத்து குறைந்தபட்ச ஆட்டோ கட்டணத்தை ரூ.2 அதிகரிக்கவும், டாக்சி கட்டணத்தை ரூ.3 அதிகரிக்கவும் டிரைவர் சங்கத்தினர் ஒப்புக் கொண்டனர் " என்றார்.
அடுத்த மாதம் அமல்
கட்டண உயர்வு குறித்து டாக்சி டிரைவர் சங்க தலைவர் குவாட்ரோஸ் கூறும்போது, "குறைந்தபட்ச டாக்சி கட்டணத்தை ரூ.25-ல் இருந்து ரூ.28 ஆக அதிகரிக்க எங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தலா ஒரு கி.மீ.க்கு ரூ.18.67 என கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்" என்றார்.
இதேபோல ஆட்டோ டிரைவர் சங்க தலைவர் தம்பி குரைன் கூறுகையில், " குறைந்தபட்ச (முதல் 1½ கி.மீ.) ஆட்டோ கட்டணம் ரூ.21-ல் இருந்து ரூ.23 ஆக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். அதன் பிறகு தலா ஒரு கி.மீ.க்கு ரூ.15.65 கட்டணம் நிர்ணயம் செய்யப்படலாம். கட்டண உயர்வு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் " என்றார்.