பிறந்த குழந்தையை ரூ.3 லட்சத்திற்கு விற்க முயற்சி- பெற்றோர், டாக்டர் கைது
பிறந்த குழந்தையை ரூ.3 லட்சத்திற்கு விற்க முயன்ற பேற்றோர் மற்றும் டாக்டரை போலீசார் கைது செய்தனர்.;
நாக்பூர்,
நாக்பூர் பச்பாவோலி பகுதியை சேர்ந்தவர் முகுல் (வயது23). இவரது மனைவி சின்ட்ரேலா (21). கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்த சின்ட்ரேலா கர்ப்பம் ஆனார். இதனால் கர்ப்பத்தை கலைக்க ஹவ்ரி நகரில் உள்ள டாக்டர் கல்யாணி என்பவரை அணுகினர். இதில் 5 மாதம் ஆனதால் கலைக்க முடியாது எனவும், சில மாதங்களில் பிறந்த குழந்தையை விற்று விடலாம் என கூறினார். இதன்படி குழந்தை பிறந்தது ரூ.3 லட்சத்திற்கு விற்க பேரம் பேசப்பட்டது.
இந்த நிலையில் குறிப்பிட்ட இடத்தில் வைத்து குழந்தை ஒன்று விற்பனை செய்யப்பட உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஹிவாங்கா மெஷ்ராம் (52) என்பவர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திற்கு குழந்தையுடன் வந்தனர். இதனை கண்ட போலீசார் 2 பேரையும் பிடித்து கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி டாக்டர் கல்யாணி, பெற்றோர் சின்ட்ரேலா, முகுலும் சிக்கினர். இவர்களை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.