சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்த 2 தங்கைகளை விஷம் வைத்து கொன்ற வனத்துறை ஊழியர் கைது
சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்த 2 சகோதரிகளை விஷம் வைத்து கொன்ற வனத்துறை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.;
நவிமும்பை,
சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்த 2 சகோதரிகளை விஷம் வைத்து கொன்ற வனத்துறை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
வனத்துறை ஊழியர்
பால்கர் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் கிளார்க்காக பணியாற்றி வருபவர் கணேஷ் மோகிதே(வயது36). வனத்துறையில் வேலை பார்த்த தந்தை விபத்தில் உயிரிழந்ததால் இவருக்கு கருணை அடிப்படையில் வேலை கிடைத்து இருந்தது. இவர் தனது தாய் மற்றும் சகோதரிகள் சினேகா(30), சோனாலி(34) உடன் வசித்து வந்தார். தந்தை உயிரிழந்த பிறகு ராய்காட் மாவட்டம் ரேவ்தாண்டா பகுதியில் உள்ள தந்தையின் வீட்டை யாருக்கும் தெரியாமல் தனது பெயருக்கு கணேஷ் மோகிதே மாற்றிக்கொண்டார். இது பற்றி அறிந்த அவரது சகோதரிகள் தனது அண்ணன் கணேஷ் மோகிதே மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த உறவினருடன் சண்டை போட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த கணேஷ் மோகிதே சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்த சகோதரிகளை கொலை செய்ய திட்டம் போட்டார்.
விஷம் வைத்து கொலை
இதன்படி கடந்த 15-ந்தேதி தசரா தொடக்க நாளில் ராய்காட் மாவட்டம் ரேவ்தாண்டாவிற்கு சகோதரிகளை அழைத்து சென்றார். அப்போது, அவர்களது தாயும் உடன் சென்று இருந்தார். அங்கு பக்கத்து வீட்டை சேர்ந்த உறவினர் சூப் தந்ததாக கூறி கொடுத்து உள்ளார். இதனை குடித்த சினேகா, சோனாலி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் சத்தம் போட்டதால் 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெவ்வேறு நாட்களில் 2 பேரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்த ராய்காட் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் 2 பேரின் சாவில் சந்தேகம் அடைந்தனர். இது பற்றி போலீசார் கணேஷ் மோகிதேவை பிடித்து கிடுக்கிடுப்பிடியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சொத்தில் பங்கு கேட்டு சகோதரிகள் தகராறு செய்ததால் அவர்களுக்கு சூப்பில் விஷத்தை கலந்து கொடுத்து கொன்றதும், உறவினர் மீது பழியை போட திட்டமிட்டதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கணேஷ் மோகிதேவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.