அதிக வருமானம் தருவதாக கூறி பிட்காயின் மோசடி செய்தவர் கைது; ரூ.1.36 கோடி இருந்த வங்கி கணக்கு முடக்கம்
பிட்காயின் முதலீட்டில் அதிக வருமானம் தருவதாக கூறி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். அவர் வைத்திருந்த ரூ.1.36 கோடி வங்கி கணக்கை போலீசார் முடக்கினர்.
மும்பை,
பிட்காயின் முதலீட்டில் அதிக வருமானம் தருவதாக கூறி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். அவர் வைத்திருந்த ரூ.1.36 கோடி வங்கி கணக்கை போலீசார் முடக்கினர்.
பிட்காயின் முதலீடு
மும்பையை சேர்ந்தவர் இஸ்மாயில் சேக். இவருக்கு கடந்த ஜூலை மாதம் ரியாசுதீன் அகமது என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இதில் ஆன்லைனில் பிட்காயின் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என தெரிவித்தார். இதனை நம்பிய அவர் பிட்காயினில் முதற்கட்டமாக ரூ.5 ஆயிரத்தை முதலீடு செய்தார். இதற்கு பதிலாக ரூ.6 ஆயிரத்து 500 திரும்ப கிடைத்தது. இதனை முழுவதும் நம்பிய இஸ்மாயில் சேக் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ரூ.7 லட்சத்தை முதலீடு செய்தார். ஆனால் பணம் திரும்ப கிடைக்கவில்லை. இதனால் ஏமாந்து போன அவர் சம்பவம் குறித்து ஓஷிவாரா போலீசில் புகார் அளித்தார்.
போலீசில் சிக்கினார்
இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட ரியாசுதீன் அகமதுவை தேடி வந்தனர். நேற்று முன்தினம் அவர் ஒர்லியில் பதுங்கி இருந்த போது போலீசாரிடம் பிடிபட்டார். அவரிடம் இருந்து மடிக்கணினி, டெபிட்கார்டுகள், காசோலைகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இவர் இதே பாணியில் பலரிடம் மோசடி செய்து வங்கி கணக்கில் ரூ.1 கோடியே 36 லட்சம் இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வங்கி கணக்கை முடக்கினர். பின்னர் மோசடியில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.