முல்லுண்டில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பணி இடைநீக்கம் - கமிஷனர் உத்தரவு

முல்லுண்டில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர், போலீஸ்காரரை பணி இடைநீ்க்கம் செய்து போலீஸ் கமிஷனர் விநாயக் தேஷ்முக் உத்தரவிட்டார்.

Update: 2023-07-30 19:45 GMT

மும்பை, 

முல்லுண்டில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர், போலீஸ்காரரை பணி இடைநீ்க்கம் செய்து போலீஸ் கமிஷனர் விநாயக் தேஷ்முக் உத்தரவிட்டார்.

லஞ்சம்கேட்ட போலீசார்

மும்பை முல்லுண்ட் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் பூஷன். இவர் போலீஸ்காரர் ரமேஷ் கலாஷ் என்பவருடன் கடந்த 19-ந்தேதி அங்குள்ள ஆஸ்பத்திரியில் போலி சான்றிதழ்களுடன் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கிடைத்த புகாரின் பேரில் விசாரணைக்கு சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில், ஆஸ்பத்திரி நடத்தியவர் போலி டாக்டர் என தெரியவந்தது. அவரிடம் கைது நடவடிக்கையில் இருந்து தப்ப உதவி செய்வதாக கூறி ரூ.25 லட்சம் லஞ்சமாக தரும்படி கேட்டு உள்ளனர். இதற்கு போலி டாக்டர் நடத்திய பேரத்தில் ரூ.11 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டார். மேலும் போலி டாக்டர் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

பணி இடைநீக்கம்

இதன்பேரில் அவர் போலீசார் யோசனைப்படி சம்பவத்தன்று ரசாயனம் தடவிய ரூ.2 லட்சம் லஞ்சப்பணத்தை போலீஸ் நிலையத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் பூஷன், போலீஸ்காரர் ரமேஷ் கலாஷ் ஆகியோரை சந்தித்து கொடுத்து உள்ளார். இதனை பெற்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் லஞ்ச ஒழிப்பு வழக்கில் சிக்கிய இன்ஸ்பெக்டர் பூஷன், போலீஸ்காரர் ரமேஷ் கலாஷ் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து கூடுதல் போலீஸ் கமிஷனர் விநாயக் தேஷ்முக் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்