பாம்பு, மரப்பல்லியுடன் அம்ருதா பட்னாவிஸ் - சமூக வலைதளங்களில் வைரல்
மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பாம்பு மற்றும் மரப்பல்லியுடன் போஸ் கொடுத்து உள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது;
மும்பை,
மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ். தனியார் வங்கி அதிகாரி, பின்னணி பாடகி மற்றும் சமூக சேவகர் என பல்வேறு முகங்களை கொண்ட அம்ருதா பட்னாவிசுக்கு டுவிட்டரில் 2 லட்சத்திற்கும் அதிகமாக பின்தொடர்பாளர்கள் உள்ளனர். சமூக ஊடகங்களில் பிரபலமான இவர் வெளியிடும் அரசியல் மற்றும் சமூகம் குறித்த பதிவுகள் அடிக்கடி வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தும். இந்த நிலையில் நேற்று அவர் வெளியிட்ட 2 புகைப்படங்கள் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியது. ஒரு புகைப்படத்தில் அவர் விஷம் நிறைந்த பாம்புடனும், மற்றொரு புகைப்படத்தில் மரப்பல்லியுடனும் போஸ் கொடுத்துள்ளார். "உலகின் மிகவும் ஆபத்தான விஷம் நிறைந்தவர்கள், கொடூரமான விலங்குகள் மனிதர்கள் மட்டும் தான்" என அந்த படத்தின் கீழ் அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவின. சில பின்தொடர்பாளர்கள், " இந்த விலங்குகள் அம்ருதா பட்னாவிசின் செல்ல பிராணிகளா" என்று ஆச்சரியமாக கேள்வி எழுப்பினர். மேலும் சிலர், " இதுபோன்ற செல்ல பிராணிகளை வளர்ப்பது சரியா? இது மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாதா? என்று கேள்வி எழுப்பினர். சிலர் இந்த விலங்குகளுடன் வெளியிட்ட புகைப்படத்தின் பின்கதையை கூறுமாறு அம்ருதா பட்னாவிசை வலியுறுத்தி இருந்தனர்.