அஜித்பவார் அணிக்கு தாவ இருப்பதாக பரபரப்பு: ஜெயந்த் பாட்டீல் கட்சி கொள்கையில் உறுதியுடன் இருப்பார் என்று நம்புகிறேன் - சரத்பவார் பேட்டி
தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் அஜித்பவார் அணிக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் கொள்கையில் உறுதியாக இருப்பார் என்று நம்புகிறேன் என சரத்பவார் கூறினார்.
பாராமதி,
தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் அஜித்பவார் அணிக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் கொள்கையில் உறுதியாக இருப்பார் என்று நம்புகிறேன் என சரத்பவார் கூறினார்.
அஜித்பவார் அணிக்கு தாவ திட்டம்
தேசியவாத காங்கிரசை உடைத்து மராட்டிய பா.ஜனதா கூட்டணி அரசில் சேர்ந்த அஜித்பவார், துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்று பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அவரது ஆதரவாளர்கள் 8 பேரும் மந்திரிகளாகினர். தங்களுடன் பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டும் என்று சரத்பவாரை அஜித்பவார் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. தேசியவாத காங்கிரசில் தற்போது அஜித்பவார் கை ஓங்கியும் உள்ளது. இருப்பினும் சரத்பவார் பா.ஜனதா கூட்டணி பக்கம் சாய மறுப்பதால் தேசியவாத காங்கிரஸ் 2 அணிகளாக செயல்படுகிறது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீலும் அஜித்பவார் அணிக்கு தாவ உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சரத்பவார் பதில்
இதுபற்றி நேற்று தனது சொந்த ஊரான பாராமதிக்கு சென்ற சரத்பவாரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:- எனது கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீலின் சகோதரருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் வந்ததாக கேள்விப்பட்டேன். அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எங்கள் சகாக்களில் சிலருக்கு நோட்டீஸ் வந்தது, பின்னர் அவர்கள் பா.ஜனதாவுடன் சென்றனர். ஜெயந்த் பாட்டீல் விஷயத்திலும் இதேபோன்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் கட்சி கொள்கை தொடர்பான ஜெயந்த் பாட்டீலின் நிலைப்பாடு தெளிவாக இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.